ஊழல் செய்வோரை ஒடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு-சிபிஎம் முடிவு

அரசியல் கட்சிகளில் இருந்தாலே நிச்சயம் ஊழல் பெருச்சாளிகளாக மாறி விடுவார்கள் - உடனடியாக இல்லாவிட்டாலும் கூட ஒரு கட்டத்தில். இப்போதெல்லாம் சாதாரண கவுன்சிலர் கூட ஸ்கார்பியோவில்தான் போகிறார் - டீ குடிக்கக் கூட.
அந்த அளவுக்கு அரசியல் இன்று அரசியல்வாதிகளுக்கு சவுகரியமானதாக, வசதியானதாக, சொகுசானதாக மாறி விட்டது.
இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களில் பெரும்பாலானோர் இன்னும் சிவப்புக் கொடியையும், நாடி, நரம்பு புடைக்க முழக்கமிடுவதையும், தட்டிகள் வைப்பதிலும்தான் மும்முரமாக உள்ளனர் - ஒரு சில விதி விலக்குகளைத் தவிர.
கம்யூனி்ஸ் கட்சித் தலைவர்களில் பலர் சாதாரணமானவர்களாக இருந்தாலும் கூட அவர்களிலும் சிலர் சொத்துக் குவிப்பிலும், ஊழல் செய்வதிலும் ஈடுபடத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஒடுக்க தற்போது புதிதாக ஒழுங்கு நடவடிக்கைக் கமிட்டி ஒன்றை தொடங்கவுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்தக் கமிட்டி, ஊழல் செய்யும், கட்சி கொள்கைகளுக்குப் புறம்பாக செயல்படுவோர், சொத்துக் குவிப்பு போன்றவற்றில் ஈடுபடுவோர் ஆகியோர் குறித்து வரும் புகார்களை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொலிட்பீரோ உறுப்பினருமான நிரூபம் சென் கூறுகையில், கட்சிக்குள் ஊடுறுவி வளர்ந்து நிற்கும் கம்யூனிச கொள்கைளுக்குப் புறம்பானவர்களை களைந்தெடுக்க இந்த கமிட்டி உதவும். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில்தான் இதுபோன்ற புகார்கள் பெருமளவில் எழுகின்றன.
பொலிட்பீரோ மற்றும் மத்திய கமிட்டி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த கமிட்டி இருக்கும். தனக்கு வரும் புகார்களை விசாரித்து இந்தக் கமிட்டி பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும்.
வியாழக்கிழமை இந்த கமிட்டிக்கு முழு வடிவம் கொடுக்கப்படும் என்றார்.
தற்போது இதுபோன்ற புகார்களை விசாரிக்க பல்வேறு கமிட்டிகள் உள்ளன. ஆனால் புகாருக்குள்ளாகும் சில தலைவர்கள், கட்சியின் உயர் மட்டக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை பாய வழியில்லாமல் போய் விடுகிறதாம். இதனால்தான் தனியாக ஒரு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியைப் போட சிபிஎம் தீர்மானித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications
