வட இலங்கையின் பலாலி விமானதளத்தை சீர்படுத்தித் தருகிறது இந்தியா
கொழும்பு: வடக்கு இலங்கையில் உள்ள பலாலி விமானதளத்தை சீர்படுத்தி, மேம்படுத்தித் தர இந்தியா முடிவு செய்துள்ளதாம்.
அதேபோல இலங்கையில் உள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் அது ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் அவர் கூறுகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை சீர்படுத்தவும், பருத்தித் துறை துறைமுகத்தை சீர்படுத்தவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இதேபோல பலாலி விமானதளத்தை சீர்படுத்தி, மேம்படுத்தித் தரவும் இந்தியா முன்வந்துள்ளது என்றார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இந்திய அரசு வழங்கும் கூடாரம் அமைக்கத் தேவையான ஷீட்களின் முதல் தொகுதியை இலங்கை அதிகாரிகளிடம் காந்தா வழங்கினார்.
ராஜபக்சேவை கொல்ல சதி-பிரிகேடியர், 36 பேர் கைது:
இதற்கிடையே, ராஜபக்சேவைக் கொல்ல சதி செய்ததாக கூறி ராணுவ பிரிகேடியர் உள்பட 37 பேரை சிறப்பு போலீஸ் படை கைது செய்துள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து இவர்கள் பிடிக்கப்பட்டனராம்.
தேர்தலின்போது ராஜபக்சேவை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி குறித்து கூடுதல் விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மீடியாக்கள் தெரிவித்துள்ளன.
பொன்சேகா அலுவலகத்திலிருந்து ஆயுதங்களும் பணமும் கொழும்பில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டதாம். இது தொடர்பாக 2 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனராம்.
கைது செய்யப்பட்டவர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்த சதி தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேரையும் போலீஸர் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications