முல்லைப் பெரியாறு வழக்கு - தமிழக வக்கீலை நீக்க வைகோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆட்சேபணை உண்டா? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால், அணையின் கட்டுப்பாட்டை தமிழகத்திடம் தர வேண்டும் என்றும் வழக்கறிஞர் பராசரன் தெரிவித்து உள்ளார். அவரை உடனடியாக இந்த வழக்கிலிருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்ட மக்களின் எதிர்கால வாழ்வையே பாழாக்கும் விபரீதம், கேரள அரசின் அக்கிரமப் போக்கால், நம் தலைமீது கத்தியாக தொங்குகிறது.

முல்லைப்பெரியாறு ஆற்று நீரில், 999 ஆண்டுகளுக்கு சட்டப்படி தண்ணீர் உரிமையை தமிழ்நாடு பெற்று உள்ளது. ஆயினும், முல்லைப் பெரியாறு அணை உடையும் என்ற பொய்ப்பிரச்சாரத்தை 79-ல் கேரளம் மேற்கொண்டபோது, மத்திய அரசின் தலையீட்டால், மைய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் கே.சி.தாமஸ் முன்னிலையில், தமிழ்நாடு அரசும், கேரள அரசும், ஒரு உடன்பாட்டை செய்து கொண்டன.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது என்றும், அதுவரை 135 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்குவது என்றும், அணையை வலுப்படுத்திய பின்பு, முன்பு இருந்த 152 அடி உயரத்துக்கு தேக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கேரளாவின் இடையறாத முட்டுக்கட்டைகளையும் மீறி, அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசுமேற்கொண்டு, அணை முன்னிலும் பலமடங்கு வலுவாகி விட்டது.

இதற்கு இடையில், பிரச்சினை உச்சநீதிமன்றத்திற்கு சென்றதால், அணையின் வலிமை குறித்து, நிபுணர்களான மிட்டல், பிரார், ராஜு ஆகியோர் தலைமையிலான குழுக்கள், தக்கஆய்வுகளை மேற்கொண்டு, அணை வலுவாக உள்ளது; எந்த சேதமும் ஏற்படாது' என தந்த அறிக்கைகளையும் கருத்தில் கொண்டு இருதரப்பு வாதங்களையும் கேட்டு தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி, உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27-ந் தேதி தீர்ப்பு தந்தது.

தமிழக அரசு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்திக் கொண்டு, முதலில் 145 அடிக்கும், பின்னர் 152 அடிக்கும் உயர்த்திக்கொள்ளலாம் என்றும், இந்த பணிகளுக்கு கேரள அரசு எவ்வித முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும் திட்டவட்டமாக தீர்ப்பு கூறிவிட்டது.

ஆனால், கேரளஅரசு, 2006 மார்ச் 18-ல் கேரள அணைகள் நீர்த்தேக்கங்கள் பராமரிப்பு பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றி, அதுவரை கேரள அரசின் பட்டியலில் இடம்பெறாத முல்லைப் பெரியாறை அதில் சேர்த்ததோடு மட்டும் அல்லாமல், கேரளத்தில் உள்ள எந்த அணையையும் செயல் இழக்கச் செய்ய, (அதாவது உடைக்க) கேரள அரசுக்கு உரிமை உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிடக்கூடாது என்றும், மிக அக்கிரமமான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதனை எதிர்த்து அண்ணா தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு, வழக்கை இழுத்தடிப்பதற்காகவே 33 தடவைகள் வாய்தா வாங்கியபோதும், தமிழக அரசின் வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை.

புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தது, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் ஆகும். ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அணை கட்ட இயலாது என்று, கேரள அரசு அமைத்த ஆய்வுக்குழு கூறிவிட்டதால், அதற்கு பக்கத்திலேயே புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது.

மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே ஆய்வுசெய்கிறது. இந்த பின்னணியில், தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, 1979-ல் செய்த உடன்பாட்டின்போது, மத்திய அரசு பங்கு ஏற்றதா? என்று கேட்டதற்கு, தமிழக அரசின் வழக்கறிஞர் பராசரன், அடிப்படை உண்மைக்கு மாறாக, மத்திய அரசு அந்த பேச்சுகளில் பங்கு ஏற்கவில்லை' என்று கூறி உள்ளார்.

புதிய அணைக்கு தமிழக அரசு ஆட்சேபணை உண்டா? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால், அணையின் கட்டுப்பாட்டை தமிழகத்திடம் தர வேண்டும்' என்றும் வழக்கறிஞர் பராசரன் தெரிவித்து உள்ளார். அரசு வழக்கறிஞரின் தனிப்பட்ட கருத்து என்பதை எவரும் ஏற்கமாட்டார்கள்.

2006-ம் ஆண்டில் இருந்தே முல்லைப்பெரியாறு பிரச்சினையில், தி.மு.க. அரசின் போக்கு, தமிழ்நாட்டுக்கு கேடாகவே அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணையை செயல் இழக்க செய்தால், (உடைத்தால்), தமிழ்நாட்டுக்கு பாதகம் வருமா?' என்று கேட்டதற்கு, கேரள அரசின் வழக்கறிஞர், துளியும் பாதகம் இல்லை' என்று கூறி உள்ளார். இதற்கும், தமிழக வழக்கறிஞர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே, 136 அடியாக நீர்மட்டத்தை குறைத்ததால் 78,000 ஏக்கர் பாசன உரிமையை இழந்ததோடு விவசாய விளைச்சல் இழப்பும், மின்உற்பத்தி நட்டமும் ஆக, ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் இதுவரை 3,900 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டு உள்ளது.

தண்ணீர் மட்டத்தை குறைத்த கேரளம், இப்போது, அணையை உடைக்க ஏற்பாடு செய்கிறது. ஆம்; முதலுக்கே மோசம் வந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்து, கேரளத்தின் அதிகாரவர்க்கம், கூத்தாடி மகிழ்கிறதாம்.

வேலியே பயிரை மேயும் இந்த நிலை, தமிழ்நாட்டின் சாபக்கேடு அல்லவா? தமிழக அரசு வழக்கறிஞர் பராசரனை, உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+