சென்னை ஏர்போர்ட்-ரூ15 லட்சம் திருடிய மும்பை ஆசாமிகள்
சென்னை: விமானப் பயணியிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை திருடிய மும்பை ஆசாமிகள் 2 பேரை சென்னை புறநகர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகரைச் சேர்ந்த வாசுதேவன் (55) கடந்த மாதம் 4ம் தேதி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்டார்.
அப்போது விமான நிலைய வளாகத்தில் தனது பையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் களவாடப்பட்டன.
இது குறித்து அவர் மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் விமான நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
வாசுதேவனிடம் இருந்து நகைகள் கொள்ளை போன தினத்தன்று சந்தேகத்திற்கிடமான வகையில் 3 மும்பை ஆசாமிகள் விமான நிலையத்தில் பல மணி நேரம் நடமாடியது தெரிந்தது.
பின்னர் அவர்கள் மும்பைக்கு புறப்பட்டு சென்றதும் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து விமான டிக்கெட்டில் கொடுக்கப்பட்டிருந்த அவர்களது செல்போன் நம்பரை குறித்துக்கொண்டு தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்றனர்.
விசாரணை நடத்தியதில் வாசுதேவனிடம் இருந்து கொள்ளை அடித்தது அந்த மும்பை ஆசாமிகள் தான் என்பது தெரிந்தது.
இதையடுத்து, மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்த உஷாகாந்த் ஜனார்த்தம் (50), துவாரகேஷ் தேடேகவுடா (45) என்ற இரண்டு ஆசாமிகளையும் இந்த தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளை போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் மீட்டனர்.
அவர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட ஜோகீந்தர் சிங் (60) என்ற மற்றொரு நபர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications