ஜம்மு வைஷ்ணவதேவி கோவிலுக்கு தீவிரவாதிகள் குறி- பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு: ஜம்மு அருகே உள்ள வைஷ்ணவதேவி குகைக் கோவிலை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய இந்துக்களின் தலம் வைஷ்ணவதேவி குகைக் கோவில். ஆண்டுதோறும் இங்கு 80 லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.
இந்தக் கோவிலைத் தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை சிறப்பு இயக்குநர் ஜெனரல் என்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜம்முவிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைஷ்ணவதேவி குகைக் கோவிலில் நாசம் விளைவிக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தக் கோவிலை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.
இதுதொடர்பான உளவுத் தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. இதையடுத்து அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிஆர்பிஎப் மிகவும் உஷாராக உள்ளது. தாக்குதலை முறியடிக்க உறுதி பூண்டுள்ளோம்.
கோவில் பாதுகாப்பாக உள்ளது. எனவே பக்தர்கள் பீதி அடையத் தேவையில்லை. வழக்கம் போல அவர்கள் இங்கு புனிதப் பயணம் மேற்கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications