தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
கோலாலம்பூர்: தமிழர்கள் மற்றும் சீனர்கள், மலாய் இனத்தவர்களுக்கு நிகரான சலுகைகளைக் கேட்டால் அவர்களது குடியுரிமை ரத்து செய்யப்படும் என மிரட்டிய மலேசிய பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரியின் பதவி பறிபோயுள்ளது.
அவரது பேச்சுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக்கின் முக்கிய உதவியாளரும், பிரதமர் அலுவக சிறப்பு அதிகாரியுமான நசீர் சபர் என்பவர் இந்தியர்களும், சீனர்களும், மலாய் இனத்தவர்களுக்கு நிகரான சலுகைகளையும், அந்தஸ்தையும் கோரினால், அவர்களது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு நாடற்றவர்களாக மாற்றப்படுவர் என்று மிரட்டிப் பேசியிருந்தார்.
இது மலேசியாவில் பெரும் கொதிப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரான தமிழர்களும், சீனர்களும், நசீரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரதமர் நஜீப்புக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. மேலும், ஒரே மலேசியா என்ற நஜீப்பின் திட்டம் தொடர்பான கருத்தரங்கில் இவ்வாறு நசீர் பேசியதால் பிரதமருக்கு பெரும் நெருக்கடியாகி விட்டது.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது நசீர் பதவி விலகி விட்டார். மேலும், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதுகுறித்து நசீர் கூறுகையில், எனது பேச்சு இனவெறியைத் தூண்டும் வகையில் அமைந்து விட்டதாக பேச்சு எழுந்து விட்டது. இதற்காக அனைத்து மலேசியர்களிடமும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நான் இவ்வாறு பேசவில்லை. எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை. யாரையும் குறைத்து மதிப்பிடவும் இல்லை.
இருப்பினும் எனது பேச்சு தவறு என்று பலரும் கூறுவதால் எனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்று எனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன்.
பிரதமர் நஜீப் கொண்டு வந்துள்ள ஒரே மலேசியா என்ற கொள்கை திட்டம், மிகவும் உயரியது. இது நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும். மலேசியாவில் வாழும் அனைத்து இனக் குழுக்களுக்கும் இடையே நல்லிணக்கவும், ஒற்றுமையும் மேலும் வலுப்பட பிரதமரின் இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கும் என்றார்.
நசீரின் பேச்சு குறித்து பிரதமர் நஜீப் கருத்து தெரிவிக்கையில், ஒருவரது குடியுரிமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அது அரசியல் சட்டத்தின் பாதுகாப்புடன் கூடியது. எனவே அதை யாரும் அவ்வளவு எளிதில் பறித்து விட முடியாது.
நசீர் சொன்னது எனது கருத்தோ அல்லது எனது அரசின் கருத்தோ கிடையாது. இது அவரது சொந்த் கருத்து. அது எங்களுக்கும் ஏற்புடையது அல்ல. இதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நஜீப்.












Click it and Unblock the Notifications