மனைவியின் சங்கிலியைப் பறித்த திருடனைப் பிடிக்க முயன்ற ராணுவ டாக்டர் குத்திக் கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில், மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற திருடனைப் பிடித்தார் ராணுவ டாக்டர். ஆனால் அந்த திருடன் டாக்டரின் தொண்டையில் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

விசாகப்பட்டனத்தில் ராணுவத்தில் டாக்டராகப் பணியாற்றி வந்தவர் மேஜர் ரமேஷ் ரங்கசாமி (33). சமீபத்தில் நெல்லையில் நடந்த ராணுவத்திற்கான ஆளெடுப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு உடல் தகுதி சோதனை நடத்த வந்திருந்தார்.

நேற்று தனது மனைவி அனுராதா (27), மகள் மிருதுளா (2) மற்றும் சில உறவினர்களுடன் திருச்சி அருகே உள்ள சுற்றுலாத் தளமான முக்கொம்புக்கு வந்திருந்தார்.

மாலை ஆறே முக்கால் மணியளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்த சமயத்தில் ஒரு திருடன், அனுராதாவிடம் நெருங்கி கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயன்றான்.

இதையடுத்து அனுராதா அலறவே, தூரத்தில் நின்று கொண்டிருந்த ரங்கசாமி வேகமாக ஓடி வந்தார். இதைப் பார்த்த திருடன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினான்.

ஆனாலும் விடாத ரங்கசாமி துரத்திச் சென்று அவனைப் பிடித்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் திருடன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் ரங்கசாமியின் தொண்டையில் இரண்டு முறை பலமாக குத்தி விட்டான்.

இதில் நிலை குலைந்து விழுந்தார் ரங்கசாமி. உடனடியாக அவரை அருகில் உள்ள பேட்டவாய்த்தலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருச்சி ராணுவ ஆளெடுப்பு மைய இயக்குநர் கர்னல் சஞ்சீவ் குமார் கூறுகையில், திருடனை ரங்கசாமி இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவனை தப்ப விடாமல் தடுத்து விட்டார்.

திருடன் தன்னை தொண்டையில் கத்தியால் குத்தியபோதும் கூட அவர் பிடியை விடவில்லை. இருப்பினும் தொண்டையில் கத்திக் குத்துப் பட்டதால் அவரால் சமாளிக்க முடியவில்லை. அந்த நிலையிலும் கூட திருடனை இறுக்கமாக பிடித்திருந்தார்.

ஆனால் அவரது பிடியிலிருந்து திருடன் தப்பி விட்டான். துணிச்சலுடன் திருடனைப் பிடித்து, கத்திக் குத்துப்பட்ட நிலையிலும் கூட துணிகரமாக போராடியுள்ளார் ரங்கசாமி என்றார்.

ரங்கசாமியைக் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடிய திருடனைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. அங்கிருந்து ஓடிய அந்த திருடன், பைக்கில் காத்திருந்த இன்னொருவருடன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இருவரும் திருச்சி - கரூர் சாலையில் சென்று அங்கு ஒரு பஸ்சில் ஏறி போயிருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள்.

மேஜர் ரமேஷ் ரங்கசாமியின் உடல் தேசியக கொடி போர்த்தப்பட்டு அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் தும்கூருக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பல காலத்திற்கு முன்பே ரங்கசாமியின் முன்னோர்கள் தும்கூரில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+