ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவர் தீக்குளித்துத் தற்கொலை
விழுப்புரம்: ராகிங் கொடுமை காரணமாக கலைக் கல்லூரி மாணவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள அனுமந்தை என்ற பகுதியைச் சேர்ந்த குப்புசாமியின் மகன் ஸ்ரீதர் (20). பொம்மையார் பாளையத்தில் உள்ள சித்தர் சிவஞானி ஆண்கள் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் அவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்தனர். இதனால் ஸ்ரீதர் மனம் உடைந்தார். தந்தை குப்புசாமியிடம் நடந்ததை கூறினார். உடனே அவர் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தார். கேலி செய்த மாணவர்கள் பெயரையும் தெரிவித்தார்.
ராகிங் செய்த மாணவர்கள் மீது எங்குமே கடும் நடவடிக்கை எடுப்பதில்லையே. ஸ்ரீதர் விஷயத்திலும் அதுதான் நடந்தது
நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஸ்ரீதர் கல்லூரிக்கு சென்றார். மதியம் 11 மணி அளவில் வீடு திரும்பினார். வந்தது முதலே சோகமாக காணப்பட்டார்.
இந்த நிலையில் திடீரென தனது வீட்டின் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
ஆனால் இன்று காலை ஸ்ரீதர் உயிரிழந்தார். நேற்று ஸ்ரீதர் கல்லூரிக்குப் போனபோது மீண்டும் அவர் ராகிங் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மிரட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications