மர்மப் பெண்ணின் துணிகரம்- கல்யாண மண்டபத்தில் 120 பவுன் நகை கொள்ளை
சென்னை: கல்யாண மண்டபத்திற்கு வந்த மர்மப் பெண் அங்கிருந்த 120 பவுன் நகைகளைத் திருடிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அந்த துணிகர பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த எம்.நந்தகோபாலின் மகன் தேவகுமார் (25). பி.காம். படித்துள்ளார். இவருக்கும் சென்னை கொடுங்கையூர் கிருஷ்ண மூர்த்தி நகரை சேர்ந்தவர் ஏகெல்லு ராமய்யா என்பவரின் மகள் ஆர்.பிரியாவுக்கும் திருமணம் நிச்சயமானது.
தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி இரு வீட்டாரும் நேற்று முன்தினம் திருமண மண்டபத்துக்கு வந்து விட்டனர். மாலையில் திருமண வரவேற்பு நடந்தது.
திட்டமிட்டபடி நேற்று காலை திருமண நிகழ்ச்சி தொடங்கி நடந்து கொண்டு இருந்தது. அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், அங்கு உறவினர் போல் வந்தார். அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார்.
பின்னர் மணப்பெண்ணின் அறைக்கு சென்று, பிரியாவின் அக்கா மஞ்சுளாவிடம் திருமணம் முடிந்ததும் மொய் எழுத வேண்டும். எனது பணப்பை பீரோவில் இருக்கிறது. எனவே பீரோவை திறந்து கொடுங்கள் என்றார்.
இதைத்தொடர்ந்து மஞ்சுளா, பீரோவை திறந்து கொண்டு இருந்தார். அப்போது, மர்ம பெண், தான் மறைத்து வைத்து இருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்து, மஞ்சுளாவின் முகத்தில் ஸ்பிரே செய்துள்ளார். இதையடுத்து மஞ்சுளா மயங்கி விழுந்தார்.
பின்னர் பீரோவில் இருந்த 120 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் நழுவி விட்டார். இது எதுவும் தெரியாமல் கல்யாணம் நடந்து முடிந்தது.
மணப்பெண் வீட்டைச் சேர்ந்த சில பெண்கள் மணமகள் அறைக்குப் போனபோதுதான் மஞ்சுளா மயங்கிக் கிடந்தது தெரியவந்து அதிர்ந்தனர். பீரோ திறந்து கிடப்பதையும், அதில் இருந்த மணப்பெண்ணின் நகை 20 பவுன், மணப்பெண்ணின் சகோதரிகள் மஞ்சுளாவின் நகைகள் 60 பவுன், ஷியாமளாவின் நகைகள் 40 பவுன் ஆக மொத்தம் 120 பவுன் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.
மேலும் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்த மர்மப் பெண்ணையும் காணாதது தெரிய வந்து அவர்தான் திருடியாக இருக்கும் என கண்டுபிடித்தனர்.
மேலும், 120 பவுன் நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு சென்ற அந்தப் பெண், அறையில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினையும் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications