உள்நாட்டு பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்பட பிரதமர் வலியுறுத்தல்

டெல்லியில் இன்று நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,
'எல்லைக்கு அப்பாலிருந்து சில தீய அன்னிய சக்திகள் நாட்டிற்குள் தீவிரவாதத்தை ஊடுருவச் செய்கின்றன. இதுபோன்ற அபாயத்தை ஜம்மு காஷ்மீர் அதிகளவு எதிர்கொள்கிறது.
உள்நாட்டில் ஏற்படும் சமூக, இன பிரச்னைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளோடு, இடதுசாரி பயங்கரவாதம், எல்லை தாண்டிய தீவிரவாதம், ஊடுருவல் போன்றவற்றையும் அடையாளம் கண்டு வேரறுக்க வேண்டிய சவால்கள் நம்முன் உள்ளன.
இத்தகைய அச்சுறுத்தல்களை சமாளிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றுபட்டு செயல்பட்டாக வேண்டும்.
இந்திய கரன்சி நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சடித்தும் எல்லைக்கு அப்பாலிருந்து கடத்திக்கொண்டு வருவதும் நடக்கிறது. இவற்றை எல்லாம் ஒருங்கிணைந்த முயற்சிகளால் மட்டுமே முறியடிக்க முடியும்.
கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்யவும், கள்ளநோட்டு பிரச்னைகளை விசாரிக்கவும் தனி குழுக்களை உருவாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
முன்னதாக துவக்க உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,
'லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகள் இந்தியாவில் நடந்த பல எண்ணற்ற கொடூரமான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளன.
இவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஸாஃபராபாத்தில் கடந்த வியாழன் கிழமை அன்று ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். அதில் அவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதை துளியும் சந்தேகமின்றி நிரூபித்துள்ளார்கள்.
காஷ்மீரை பலவந்தமாக பாகிஸ்தானுக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது. அதற்கு வன்முறை, கொடூரமான தாக்குதல் ஆகியவற்றை தான் அவர்கள் ஆயுதமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அவர்களை நாம் எப்போது, எந்த சமயத்தில் எதிர்கொண்டாலும், அவர்களை நாம் நிச்சயம் வீழ்த்துவோம்' என்றார்.












Click it and Unblock the Notifications