கடையநல்லூர் விஷக் காய்ச்சல் பலி தொடருகிறது-சிறுமி பலி
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே விஷக் காய்ச்சலுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர் கதையாகியுள்ளது. நேற்று 2 வயது சிறுமி பலியானதை அடுத்து பொதுமக்களிடையே அச்சம ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 மாத காலமாக மர்ம காய்ச்சல் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இக்காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 30 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தக் காய்ச்சல் டெங்கு, சிக்குன்குன்யா காய்ச்சல்தான் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் எடுத்த தொடர் நடவடிக்கையால் காய்ச்சல் ஓரளவு கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் முழுமையாக மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் சாவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி பெரியதெருவை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரது மகள் அபிநயா காய்ச்சலுக்கு நேற்று பலியானாள். இதையடுத்து விஷக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30ஐ தாண்டியுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சொக்கம்பட்டியில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டினால் காய்ச்சல் அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைளை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கடையநல்லூரை சேர்ந்த வக்கீல் முகமது மைதீன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு பதல் அளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கடையநல்லூர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் விளங்கும் பாப்பாங்கால் உள்பட பல்வேறு பகுதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
இருப்பினும் சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகமோ, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகமோ தீவிர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications