மாவோயிஸ்டுகள் வன்முறை: தண்டவாளங்கள் தகர்ப்பு; இருவர் பலி
ஜாமுய் (பீகார்): பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், தண்டவாளஙகள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. இதில் ரயில்வே அலுவலர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டுகள் 72 மணி நேர பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதையொட்டி நேற்று நள்ளிரவு முதல் இந் நான்கு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கையாக பல்வேறு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் பாதைகள் மாற்றப்பட்டன.
நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் ஆங்காங்கே போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பீகாரின் ஜாமுய் மாவட்டத்தில் உள்ள ராஜ்லா ரயில் நிலையத்தின் அருகே ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் நேற்றிரவு தகர்த்துள்ளனர்.
ராஜ்லா மற்றும் நார்ஜாங்கோ ரயில் நிலையங்களுக்கும் இடையில் காபா பாலத்தின் அருகே தண்டவாளத்தை நேற்றிரவு 40 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தண்டவாளத்தை குண்டுகள் வைத்து தகர்த்ததாக கூறப்படுகிறது.
இதில் ரயில்வே அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ரயில்பாதை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் பாதையை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், ஒரிசா-ஜார்க்கண்ட் எல்லையிலும் நேற்றிரவு நடத்த தாக்குதலில் ரயில்வே கண்காணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி-ஹவுரா இடையிலான ரயில்பாதை ஒன்றிலும் குண்டுகள் வைக்கப்பட்டதாகவும், பல நெடுந்தூர ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications