நளினி விடுதலை வழக்கு - 19ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு
சென்னை: நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வருகிற 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதுவரை 18 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி சிறைவாசம் அனுபவித்துள்ளார். 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த நான் ஆயுள் தண்டனையில் இருந்து முன் கூட்டியே விடுதலை செய்யப்படு வதற்கு தகுதியானவர் என்பது அவரது வாதம். ஆனால் இதுவரை அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் இது குறித்து ஆலோசனை குழு அமைத்து ஆய்வு செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வேண்டியிருந்தார்.
இதனை விசாரித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சி.ராஜேந்திரன் தலைமையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவானது வேலூர் சிறையில் நளினியை சந்தித்து அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.
இந்த குழு தற்போது தனது அறிக்கையை தமிழக அரசிடம் அளித்து விட்டது. இந்த நிலையில், இன்று நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை வராததை அடுத்து வருகிற 19ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications