உடனே பென்னாகரம் தேர்தல்-சாவ்லாவிடம் திமுக கோரிக்கை

பென்னாகரம் தொகுதி திமுக உறுப்பினர் பெரியண்ணன் டிசம்பர் 1ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து ஜனவரி 20ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் பொங்கல் பண்டிகை குறுக்கிடுவதால் தேர்தலை தளளி வைக்க வேண்டும் என்று பாமக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்டவை கேட்டுக் கொண்டன. அதன்படி தள்ளி வைக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக பென்னாகரம் தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியலை கடந்த 2ம் தேதி வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்திருந்தது.ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகள் வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி தேர்தல் கமிஷனரிடம் புகார் அளித்தன.
இதேபோன்ற புகாரை பாமகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. உண்மையில் பாமகதான் இந்தப் புகாரை முதலில் வெளியிட்டது.
இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது. இது சர்ச்சையைக் கிளப்பி விட்டது. நவீன் சாவ்லா பாரபட்சமாக நடப்பதாகவும், அதிமுகவுக்கு சார்பாக நடந்து கொள்வதாகவும் பாமகவும், முதல்வர் கருணாநிதியும் குற்றம் சாட்டினர்.
மேலும், ஜெயலலிதா, சோனியா சந்திப்புக்கு நவீன் சாவ்லாதான் ஏற்பாடு செய்தார் என்றும் முதல்வர் கருணாநிதியும், ராமதாஸும் குற்றம் சாட்டினர்.
இந்தப் பின்னணியில், தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவை திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று டெல்லியில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
இந்தக் குழுவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அப்போது, பென்னாகரத்தில் தேர்தல் நடத்தும் சூழல் நிலவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வுகள் பாதிக்காத வகையில் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும். அதிமுக கூட்டணிக் கட்சிகள் தவறான தகவலை தந்து இடைத்தேர்தலை தள்ளிவைக்க முயற்சி செய்கின்றன. எனவே பென்னாகரம் இடைத்தேர்தலை நடத்த உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணியினர் வலியுறுத்தினர்.
டெல்லிக்கு ஓடிய நரேஷ் குப்தா:
இதற்கிடையே, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும் இன்று காலை டெல்லிக்கு விரைந்தார். இவரை ஏற்கனவே அதிமுக அனுதாபி என்று திமுகவும் பாமகவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
வேண்டுமென்றே தாமதிக்கவில்லை-ஆணையம்:
இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தலை வேண்டுமென்றே நடத்தாமல் தாமதம் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் நிலவுவதாக சில பத்திரிக்கைச் செய்திகள் கவலை தெரிவித்துள்ளன.
முதலி்ல் ஜனவரி 20ம் தேதி தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது. இருப்பினும் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு ஆகியவை வருவதால் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து அந்த அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
2010ம் ஆண்டு இடைத் தேர்தலை நடத்த வேண்டுமானால் வாக்காளர் பட்டியலை திருத்தியாக வேண்டியிருந்தது.
வாக்காளர் பட்டியலும் திருத்தப்பட்டு விட்ட நிலையில், சில அரசியல் கட்சிகள், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், சில உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளாகவும் புகார் கூறின.
இதையடுத்து தற்போது இந்த வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 17ம் தேதி தேர்தல் ஆணையம் மறு ஆய்வு செய்யவுள்து. அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு இடைத் தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
பள்ளிக்கூட பொதுத் தேர்வுகள், மத விழாக்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருத்தமான காரணங்களையும் மனதில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என விளக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன. தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வுகளும் பிற வகுப்புகளுக்கான வருடாந்திர தேர்வுகளும் நடைபெறவுள்ளன.
எனவே மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகம்தான் என்று தெரிகிறது. அனேகமாக மே மாதத்திற்குத் தேர்தல் தள்ளிப் போகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
சட்ட விதிப்படி ஜூன் மாதத்திற்குள் பென்னாகரத்திற்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications