நீக்கும் வரை அதிமுக எம்.எல்.ஏவாகவே தொடருவேன் - கோவில்பட்டி ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து மக்கள் பிரச்சினை குறித்துப் பேசினார் ராதாகிருஷ்ணன். அடுத்து சென்னை விரைந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்தார். பின்னர் சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து முடித்தார்.
திமுக சார்பில் பலமான வரவேற்பு..
இதையடுத்து இன்று அவர் கோவில்பட்டி திரும்பினார்.
அவருக்கு திமுக சார்பில் பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க. நகர செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் செயலாளர்கள் கருணாநிதி, சிவா, பஞ்சாயத்து தலைவர்கள் பச்சைமால், மாரீஸ்வரன் உள்பட தி.மு.க. தொண்டர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் எம்.எல்.ஏ.அலுவலகம் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவில்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மதுரையில் சந்தித்து மனு கொடுத்தேன்.
அப்போது கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் நலிவடைந்துள்ளதால் ,ஏராளமான தொழிற்சாலைகள் நிறுவி இப்பகுதி மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதற்கு அழகிரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்கும்படியும் கூறினார்.
அதன்படி நான் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தேன். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பின்னர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்தேன். அவர் கோவில்பட்டியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
அப்போது அதிகாரிகள் கோவில்பட்டியில் 2-ம் பைப்லைன் திட்டம் செயல்படுத்துவதில் பிரச்சினைகள் இருப்பதாக கூறினர். பிரச்சினையை தீர்த்து கோவில்பட்டி பகுதிக்கு இந்த ஆண்டுக்குள் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் தெரிவித்தார்.
நான் கருணாநிதியை சந்தித்ததால் என்னை அ.திமு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கி விட்டனர். அது பற்றி நான் கவலைபடவில்லை. கட்சியில் பதவி வரும், போகும்.
கருணாநிதியை சந்தித்ததால் நான் தி.மு.க.வில் இணைந்ததாக அ.தி.மு.க.வினர் சிலர் கூறுகிறார்கள். நான் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறேன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன்.
அ.தி.மு.க.அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்கினால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன். கட்சி என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதற்கேற்றாற் போல் எனது நடவடிக்கை இருக்கும் என்றார் ராதாகிருஷ்ணன்.
முன்பு எஸ்.வி.சேகரும் இப்படித்தான் நீண்ட காலமாக திமுக ஆதரவுப் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். ஆனால் ஜெயலலிதா அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. பின்னர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் சேர்த்து நீக்கினார். தற்போது எஸ்.வி.சேகர் பாணியில் அதிமுகவில் இருந்தபடியே திமுக ஆதரவுப் போக்கை ராதாகிருஷ்ணன் கடைப்பிடிப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications