இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை வரும் 25ம் துவங்கும்!
இஸ்லாமாபாத்: இந்தியா உடனான வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
வரும் 25ம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்ற நாளாக இருநாடுகளும் குறிப்பிட்டுள்ளன.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிவிட்டன.
இந்நிலையில் பேச்சுவார்த்தையை துவக்கத் தயார் என இந்தியா தனது நிலையை இரு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தெரிவித்தது.
வருகிற 18 அல்லது 25 ஆகிய இரண்டு தேதிகளில் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரோஷி பிப்ரவரி 25 ஏற்புடையதாக இருக்கும் என இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதுபற்றி கூறுகையில், 'இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி முயற்சிகளில் நாம் இன்னும் முன்னேற்றம் காணவேண்டும்.
காஷ்மீர் விவகாரம், தண்ணீர் பிரச்னை என அணைத்தையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையாக இருந்தால் தான் முயற்சிகள் தக்க பலன் அளிக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் தயாராகிவிட்ட நிலையில் வரும் 25ம் தேதி இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவும், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் சல்மான் பஷீரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications