நாத்திகத்தை திணிக்கவும் இல்லை, ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

ென்னை: நான் எழுதிய திருக்குறள் உரையில் நாத்திகத்தை திணிக்கவும் இல்லை,​ ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு 'திருக்குறள் பேரொளி' விருது வழங்கப்பட்டது. பேரவையின் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல்வர் இந்த வழங்கினார்.​

விருதைப் பெற்றுக் கொண்டு கருணாநிதி பேசுகையில்,

மறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் எனக்கு அன்பும்,​​ பாசமும்,​​ பரிவும் உண்டு.​ தமிழ் மீதும்,​​ தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன்.​

அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார். ​இரண்டு அடிகளார்களும் பெரியார்,​​ அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள்.

எனக்கு திருக்குறள் பேரொளி என்ற விருது வழங்க விரும்புவதாகவும்,​​ அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார்.​

துறவிகள் ஆசைப்படக் கூடாது.​..

எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா?​ என்றேன்.​ எனது ஆசையை நிறைவேற்றுங்கள் என்றார்.​ துறவிகள் ஆசைப்படக் கூடாது.​ ஆனாலும் அவரது இந்த ஆசையை நான் புறக்கணிக்க விரும்பவில்லை.

எனக்கு திருக்குறள் பேரொளி என்ற விருது வழங்கியுள்ளார்கள்.​ திருக்குறளே ஒரு பேரொளிதான்.​ "அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா?'' என்பதுதான் என் கேள்வி. இருந்தாலும், திருக்குறளை பேரொளி என்று இருட்டிலே இருப்பவர்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவாவது, இந்த விருது பயன்படட்டும் என்று எண்ணியோ, என்னவோ, இந்த பேரொளியை அவர்கள் எனக்கு தந்திருக்கிறார்கள்.

என்னை சுற்றி வட்டமிடுகின்ற ஒளி அல்ல...

இந்த பேரொளியை-ஏதோ என்னை சுற்றி வட்டமிடுகின்ற ஒளி என்று கருதாமல், தமிழை, தமிழின் புகழை இந்த தரணியிலே நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவேன் என்ற உறுதிமொழியை நான் அவருக்கும், அவருடைய மன்றத்திற்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்று சட்டமன்றத்திலே நானும், நாவலரும், பேராசிரியரும் அமருகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது, அப்பொழுதுகூட சில வாசகங்களை எப்படியெல்லாம் நாம் நடைமுறைப்படுத்தலாம் என்று எண்ணிய நேரத்திலே, "சத்தியமே ஜெயதே'' என்றிருந்த அந்த சொற்றொடரை எப்படி மாற்றலாம் என்று கருதியபோது, "சத்தியம்'' என்றால் வாய்மை; "வாய்மை வெல்லும்'' என்று சொல்லலாமே? என்று யோசித்து, "வாய்மையே வெல்லும்'' என்றிருக்கலாம் என்று அந்த சொற்றொடரைப் பயன்படுத்தினோம்.

"வாய்மை'' என்றால் உண்மையென்று யாரும் கருதி விடக்கூடாது. உண்மை வேறு; வாய்மை வேறு. வாய்மையாக இருப்பது வேறு; உண்மையாக இருப்பது வேறு. "உண்மை சொன்னான், உண்மை பேசினான்'' என்றுதான் உண்மை என்ற சொல் வருமே தவிர, தனியாக உண்மைக்கு அந்த பொருள் கிடையாது. வாய்மைதான் தனியாக உச்சரிக்கக்கூடிய, பயன்படுத்தக்கூடிய, எடுத்துக்காட்டக்கூடிய ஒரு சொல்.

உண்மையும், வாய்மையும்...

உண்மையையும், வாய்மையையும் ஒன்றாக எண்ணிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். "வாய்மை'' என்பது, பிறருக்கு தீங்கில்லாமல் சொல்லப்படுகின்ற ஒரு சொல்லுக்கு பெயர்தான் வாய்மை அடிப்படையிலே பிறக்கின்ற ஒரு சொல்லாகும். யாருக்கும், எந்த வித கெடுதலும் ஏற்படாமல், இந்த வார்த்தையினால் உறுதியோடு சொல்லப்படுகின்ற சொல் "வாய்மை'' ஆகிறது. "உண்மை'' என்பதை அதற்கு அடுத்த கட்டத்திலே வைக்கலாமே தவிர, அது வேறு, இது வேறு.

"பொய்ம்மையும், வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்'' என்றார் வள்ளுவர். அதற்கு நான் குறளோவியத்திலே சிறிய கதை மூலம் விளக்கம் அளித்திருக்கிறேன்.

"மான் குட்டியா, வரவில்லையே?''...

அந்தக் கதையில் வேடன் ஒருவன் வில்லும், அம்பும் கையில் ஏந்தி வேகமாக வருகின்றான். வருகிற வேடனுடைய குறிக்கோள், அவனால் துரத்தப்பட்ட மான் குட்டியைப் பிடிக்க வேண்டுமென்பதுதான். அம்பெய்து கொன்று அந்த மானை உணவாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற குறிக்கோளோடு வேடன் வருகிறான்.

வள்ளுவர் தன் குடிலிலே அமர்ந்திருக்கிறார். அந்த குடிலுக்குள்ளே மான் குட்டி ஓடி, ஒளிந்து கொள்கிறது. ஓடி வந்த வேடன், வள்ளுவரைப் பார்த்து, "அய்யா இங்கே ஒரு மான் குட்டி வந்ததா, எங்கே?'' என்று கேட்கிறான். அதற்கு வள்ளுவர் "மான் குட்டியா, வரவில்லையே?'' என்கிறார். வேடன் திரும்பிப் போய் விடுகிறான். மான் குட்டி தப்பித்துக் கொள்கிறது.

பக்கத்திலே இருக்கிற ஒருவர், வள்ளுவரைப் பார்த்து, "ஏனய்யா ஊருக்கெல்லாம் உண்மையைப் பேசச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வேடனிடத்திலே பொய்யாக மான் குட்டி வரவில்லை என்று சொல்லி விட்டீர்களே'' என்கிறான். உடனே வள்ளுவர் சொல்கிறார். "நான் உண்மையைச் சொல்லியிருந்தால் மான் குட்டி இந்நேரம் வேடன் வயிற்றுக்குள் போயிருக்கும். அதனால் தான் நான் வாய்மையோடு மான் குட்டியைக் காப்பாற்றினேன்'' என்கிறார்.

பொய்மை கூட, வாய்மையின் இடத்திலே...

மேலும், அவர் கூறும்போது "மான் குட்டி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னிடம் வந்தது. அதை இங்கே தான் இருக்கிறது, போய் பிடித்துக்கொள் என்று சொன்னால் மான் குட்டியின் கதி என்ன ஆகும் என்று எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். அதனால் தான் நான் இந்த பொய்யைச் சொன்னேன்'' என்கிறார். "அப்படியென்றால் பொய் சொல்லலாமா?'' என்று கேட்கிற போது, வள்ளுவர், "அதற்கு தானப்பா இந்த குறளை எழுதியிருக்கிறேன். "பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்'' - ஒரு நல்ல காரியத்தை செய்வதென்றால், அந்த நேரத்தில் பொய்மை கூட, வாய்மையின் இடத்திலே வைக்கப்படும்.

வாய்மை என்பது உயர்ந்ததோர் பண்பாடு. வாய்மையின் இடத்திலே வைக்கப்படும் என்று நான் சொல்வதற்கு காரணமே, பொய் தவறு தான், இருந்தாலுங்கூட அது ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுமேயானால், சொல்லலாம். இப்போது நான் சொன்னது நல்ல காரியத்திற்கு பயன்பட்டிருக்கிறதா இல்லையா? மான் குட்டியைக் காப்பாற்றியிருக்கிறதா இல்லையா? அதனால் அதுவும் வாய்மையின் இடத்திலே வைக்கப்படும்'' என்று வள்ளுவர் சொல்லி தன்னுடைய குறளுக்கு விளக்கம் அளித்ததாக நான் குறளோவியத்தில் விளக்கம் அளித்திருக்கிறேன்.

இப்படி பல குறட்பாக்களுக்கு சித்திரம் தீட்டிய காரணத்தால்- ஓவியம் தீட்டிய காரணத்தால் அனைத்தும் நிறைந்த புத்தகமாக, குறளோவியம் வெளியிடப்பட்டது. அதையெல்லாம் இங்கே பாராட்டுகின்ற வகையில் நம்முடைய அடிகளார் அவர்கள் இங்கே சொன்னார்கள். அதற்காகத்தான் இந்த விருது கொடுப்பதாக எடுத்துக் காட்டினார்கள்.

நான் திருக்குறளுக்கு எழுதிய உரை எந்த கொள்கையையும் சார்ந்தது அல்ல, வள்ளுவர் காலத்திலே இந்த நிலை இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து, அதற்கு முரணாகாமல் எழுதப்பட்ட உரை தான் அது.

சில பேர் நாத்திக கருத்துகளை தாங்கள் கொண்டிருந்தால், வள்ளுவரையும் நாத்திகராக ஆக்குவதற்காக முயற்சி செய்திருப்பார்கள், சில பேர் ஆத்திக கருத்துகளிலே பெரும் புலவர்களாக இருந்தால் அந்த ஆத்திக கருத்துக்களை வள்ளுவர் மீது சுமத்துவதற்கு அவர்கள் உரையிலே முயற்சி செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், நான் நாத்திகத்தையும் திணிக்க விரும்பவில்லை. ஆத்திகத்தையும் புறக்கணிக்கவில்லை.

வள்ளுவர் காலத்திலே அவர் என்ன நிலையிலே அதை எழுதியிருக்க முடியும் என்ற அந்த ஒரு உண்மையை உணர்த்துவதற்காகத்தான் உரைக்கு நான் முக்கியத்துவம் தந்திருக்கிறேன்.

இவைகளையெல்லாம் நுணுகி ஆராய்ந்து நம்முடைய அடிகளார் அவர்கள் அவருக்கே உரிய தனித் தன்மையோடும், அவருக்கே உரிய தமிழ்ப் புலமையோடும், அவர் கொண்டிருக்கின்ற தமிழ் ஆர்வத்தோடும் என்னை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும், வெறும் குறளிலே மாத்திரமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த குறளைக் கொண்டு வருகின்ற பாண்டித்யம் பெற்றவனாக நான் ஆக வேண்டும், இந்த பாராட்டு மூலமாக அந்த உணர்வை நான் பெற வேண்டுமென்பதற்காக இவைகளையெல்லாம் அவர் பாராட்டி, புகழ்ந்து இந்த "பேரொளி'' என்கிற பட்டத்தைத் தந்திருக்கிறாரே அல்லாமல்,

நான் ஒன்றும் பேரொளியின் அடியிலே இருப்பவன் அல்ல, என்னைச் சுற்றி பேரொளி ஒன்றும் வீசிக் கொண்டிருக்கவில்லை, ஒரு வேளை சொல்ல வேண்டுமேயானால், என்னைச் சுற்றி பேரொளி இருக்கிறது, அடிகளாரைப் போல- இங்கே அமர்ந்திருக்கின்ற வா.செ.குழந்தைசாமியைப் போல- இப்படி பல பேரொளிகள் என்னைச் சுற்றியிருக்கின்றன.

அந்த பேரொளிகளால் நான் ஒளி பெறுகிறேன் என்றால், அவர்களுக்கெல்லாம் இந்த விருதைக் காணிக்கையாக்குகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+