இலங்கையில் செய்தி இணையதளங்களைத் தடை செய்ய ராஜபக்சே அரசு திட்டம்?
கொழும்பு: இலங்கையில் இனி செய்தி இணைய தளங்களைப் பார்க்க முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு. மியான்மரைப் போல யாராலும் அணுக முடியாத, யாரும் உள்ளே நுழைய முடியாத, இரும்புக் கோட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது இலங்கையின் ராஜபக்சே அரசு.
அரசுக்கு எதிராக செயல்படுவோரை முளையிலேயே கிள்ளி எறியும் வேலையில் ராஜபக்சே அரசு குதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து வெளியாகும் அனைத்து செய்தித் தளங்களையுமே முற்றாக முடக்கிவிட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்கென சீனாவின் ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது ராஜபக்சே அரசு.
சீனாவில் மாற்றுக் கருத்துக்களைப் பரப்பும் எந்த ஊடகமும் அனுமதிக்கப்படுவதில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டோரின் இமெயில் கணக்குகள் கூட முற்றாக முடக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில்தான் கூகுள் நிறுவனமே சீனாவிலிருந்து வெளியேறுகிறது.
இதே பாணியில் இலங்கையிலும் தணிக்கை மற்றும் தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை செய்தித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பல தளங்களில் மாற்று செய்திகள் பரப்பப்படுவதாகவும், இதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், செய்தித்தளங்களை முடக்குவதில் தேர்ந்த சீன கம்ப்யூட்டர் நிபுணர்கள் குழு நாளை கொழும்பு வரவிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications