ஹாத்வேக்கு சேனல்களை தரமுடியாது!-ஜீ குழுமம் அறிவிப்பு
மும்பை: பணம் செலுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் செய்துவரும் ஹாத்வே டேடாகாம் நிறுவனத்துக்கு ஜீ குழும சேனல்கள் தருவதை நிறுத்திக் கொள்ளப்போவதாக ஜீ டர்னர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜீ குழும சேனல்களை ஆபரேட்டர்களுக்கு விநியோகம் செய்யும் நிறுவனம் ஜீ டர்னர். எஸ்ஸெல் குழுமமும் டர்னர் குழுமமும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது.
ஹாத்வே கேபிள் ஆபரேட்டர்கள் ஜீ குழுமத்தின் 33 சேனல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
ஆனால் 'கடந்த 10 மாதங்களாக செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறது ஹாத்வே' என புகார் தெரிவித்துள்ள ஜீ டர்னர், இதுகுறித்து பேசுவதற்குக் கூட ஹாத்வேக்காரர்கள் மறுத்து வருவதாக கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஹாத்வேயுடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடிவுக்கு வந்துவிட்டதாம்.
இனி புதிதாக ஒப்பந்தம் போட்டுதான் ஜீ சேனல்களை ஹாத்வே பெற முடியும் என்றும் இல்லாவிட்டால் ஜீ குழுமத்தின் 33 சேனல்களையும் ஹாத்வேக்கு தராமல் நிறுத்தப் போவதாகவும் ஜீ டர்னர் கூறுகிறது.
மேலும், ஹாத்வே நிறுவனம் தனது சந்தாதாரர்கள் விவரம் பற்றி சரியான தகவலைச் சொல்லாமல் மறைத்து வருகிறதாம். 80 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளதாக விளம்பரங்களில் கூறிவருகிறது ஹாத்வே. இதே நிறுவனம் அரசுக்கு அளித்த தகவல்களில் 20 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் தங்களுக்கு அளித்துள்ள ஆவணங்களில் வெறும் 4 லட்சம் சந்தாதாரர்கள்தான் இருப்பதாக தங்களிடம் கூறிவருவதாகவும் ஜீ குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications