சென்னையில் 3 ரவுடிகள் மோதல்-ஒரு ரவுடி பலி!
சென்னை: சென்னையில் முன்விரோதம் காரணமாக மூன்று ரவுடிகளுக்கிடையே மோதல் மூண்டது. இதில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அண்ணன், தம்பியான மற்ற இரு ரவுடிகளும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
வட சென்னை, வியாசர்பாடி மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவர் முருகன் (25). மனைவி பெயர் அனுஷா. இரண்டு குழந்தைகள் உள்ளன.
முருகன் ஒரு ரவுடி. கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், வழிப்பறி, மாமூல் வசூல் என சகலவிதமான ரவுடித்தனத்தையும் செய்து வந்துள்ளார்.
முருகன் மீது மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த முருகனின் நண்பர் கமல். இவர் நேற்று இரவு மகாகவி பாரதி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு ரவுடியான பிரசாத் என்பவர், கமலை மறித்துத் தாக்கியுள்ளார்.
அவரிடமிருந்து தப்பி ஓடிய கமல், முருகனிடம் போய் முறையிட்டார். ஏற்கனவே முருகனுக்கும், பிரசாத்துக்கும் தொழில் ரீதியாக பிரச்சினை இருந்து வந்தது.
தனது நண்பரை பிரசாத் அடித்ததைக் கேள்விப்பட்ட முருகன் அதே வேகத்தோடு பிரசாத் வீட்டுக்குச் சென்றார். கமலை எப்படி அடிக்கலாம் என்று கேட்டு சண்டை பிடித்துள்ளார்.
இதையடுத்து பிரசாத்தும், அவரது தம்பியான சார்லஸும் (இவரும் ஒரு ரவுடிதான்) முருகனைத் தாக்கியுள்ளனர். மேலும் அரிவாளாலும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் முருகன் அங்கேயே பிணமானார். பிரசாத்தும், சார்லசும் தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து மகாகவி பாரதி நகர் போலீஸார் விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரசாத், சார்லஸ் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் கைதாகாமல் தப்பிக்க பெங்களூரில் கடந்த ஒரு வருடமாக பதுங்கியிருந்தனர். கடந்த வாரம்தான் ஊர் திரும்பினர். இந்த நிலையில் ரவுடி முருகனை கொன்று விட்டு தப்பியுள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications