ஆந்திரா-ரூ.20 கோடி சொத்து குவித்த சட்டசபை செயலாளர்!
ஹைதராபாத்: ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைச் செயலாளர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்திருப்பது அம்பலமாகியுள்ளது.
மேலும் அவரின் பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்தால் சொத்துமதிப்பு பலமடங்காக அதிகரிக்கும் என லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைச் செயலாளர் கோபால கிருஷ்ணய்யா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
அரசாங்கத்தின் பல்வேறு திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை அமைச்சர்களுக்கும், அவர்களின் பினாமிகளுக்கும் பெற்று தந்தே இவர் பல கோடி சொத்துக்களை சேர்த்துவிட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சு நிலவிவந்தது.
மேலும், கை விரல்கள் அத்தனையிலும் மோதிரங்களுடனும், தங்கச் செயின்களுடனும் வலம் வந்த இவர் பயன்படுத்தும் பேனா கூட சுமாராக ரூ.10 ஆயிரம் மதிப்புடையதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பெரிய மட்டத்தில் தனது தொடர்புகளை வைத்துக்கொண்டு கொள்ளையடித்து வந்த இவர் தனக்கு கீழுள்ள அதிகாரிகளிடம் கறார் பேர்வழி போல நடந்துகொள்வாராம்.
இதனால், கீழ் மட்டத்தில் உள்ள ஊழியர்கள் மத்தியில் இவர் மீது ஒருவிதமான புகைச்சல் இருந்துவந்தது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள கோபால கிருஷ்ணய்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
அவரின் வீட்டில் இருந்த, நகை, பணம், பல்வேறு ஆவணங்கள் என முழுவதையும் ஒரு நாள் முழுக்க சல்லடை போட்டு தேடி எடுத்த அதிகாரிகள், கோபால கிருஷ்ணன் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுபற்றி காவல்துறை கண்காணிப்பாளர் அகுந்த் சபர்வால் கூறுகையில், 'கோபாலகிருஷ்ணய்யா வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின.
அவருக்கு ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், 5 வீட்டுமனைகள், நெல்லூரில் 17 வீட்டுமனைகள், சித்தூரில் 9 வீட்டுமனைகள், கிருஷ்ணா மாவட்டம் நாகயலங்காவில் 16 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை உள்ளன.
மேலும் அவரது வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், 1.2 கிலோ தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 14 பேனாக்கள் ஆகியவை சிக்கின.
மொத்தமாக இவற்றின் சந்தை மதிப்பு ரூ.20 கோடியை தாண்டும். அவர் மேலும் வேறு எங்காவது சொத்து சேர்த்துள்ளாரா? அவரது 'பினாமி' யார் என்பது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications