கருணாநிதியுடன் ஜெயங்கொண்டம் அதிமுக எம்எல்ஏ சந்திப்பு

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் 'காடுவெட்டி' குருவை தோற்கடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டில் நடந்த இச் சந்திப்பின்போது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர், ஆண்டிமடம் திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது தனது தொகுதியில் அடிப்படை வசதி திட்டங்களை நிறைவேற்றித் தருமாறு முதல்வரிடம் ஒரு கோரிக்கை மனுவையும் ராஜேந்திரன் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ராஜேந்திரன், சட்டப்பேரவையில் எனது ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் பிரச்சனைகளை பேசவே அதிமுக மேலிடம் அனுமதிப்பதில்லை.
அதிமுகவில் 'பொம்மை எம்எல்ஏ'வாக செயல்பட வேண்டியுள்ளது. ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ள அதிமுகவினரால் எந்தப் பயனும் இல்லை.
மாநில அரசு அறிவிக்கும் எந்த திட்டத்தையும், அதிமுக எம்எல்ஏவாக இருந்து என்னால் செயல்படுத்த முடியவில்லை. கடந்த 4 வருடமாக அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தும், தொகுதிக்கு எந்த நலனும் செய்ய முடியவில்லை.
தொகுதிக்கு வேண்டியதை மத்திய-மாநில அமைச்சர்களை சந்தித்துத்தான் கோரிக்கை வைக்க முடியும். எனவேதான் 'பொம்மை எம்எல்ஏ'வாக இருந்தது போதும் என்று முடிவு செய்து, கடைசி ஒரு வருடத்திலாவது ஜெயங்கொண்டம் தொகுதி மக்களுக்கு நன்மை செய்யலாம் என்று தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி முதல்வர் கருணாநிதியிடம் மனு கொடுக்க வந்தேன்.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் அதிக பேருந்துகள் வந்து செல்கின்றன. எனவே அந்த பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், திருச்சி-சிதம்பரம் சாலையில் பேருந்து போக்குவரத்து அதிகம் உள்ளதால், குறுகியதாக உள்ள அந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன்.
ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி அதிகமாக விளைகிறது. இதனால் அதைப் பதப்படுத்தும் தொழிற்சாலையை அங்கு உருவாக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரினேன்.
அணைக்கரை பாலம் பழுதுபட்டிருக்கிறது. அதனை விரைவில் முடித்துத் தருமாறு மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன். என் தொகுதியி்ல் அரசினர் பாலிடெக்னிக், அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றை திமுக அரசு அமைத்திருக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மத்திய அமைச்சர் ராசா பல்வேறு நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறார். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரியை பெற்றுத் தந்திருக்கிறார். ஆண்டிமடத்தில் ஐ.டி.ஐ. வருவதற்கு வழி வகுத்திருக்கிறார்.
ஜெயங்கொண்டத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க அமைச்சர் ராசா எடுத்த முயற்சியால் ரூ20 கோடி ரூபாயில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் மக்களுக்காக ஒரு நல்ல அரசு செய்யும் காரியங்களாக இருக்கின்றன என்றார் ராஜேந்திரன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இருந்தது. அப்போது ஜெயங்கொண்டத்தில் பாமக சார்பில் போட்டியிட்ட வன்னியர் சங்கத் தலைவர் 'காடுவெட்டி' குருவை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு முழுக்கு போடும் 4வது எம்எல்ஏ:
முதலில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் திமுகவுக்கு ஆதரவாக மாறியதையடுத்து அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இப்போது அவர் சுயேச்சை எம்எல்ஏவாக அறிவிக்கப்பட்டுவிட்டார்.
இதையடுத்து திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அந்தக் கட்சியை விட்டு விலகி, தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.
இவரைத் தொடர்ந்து கோவில்பட்டி அதிமுக எம்எல்ஏவான ராதாகிருஷ்ணனும் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சிப் பதவியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பறித்தார். ஆனாலும் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை.
எஸ்வி சேகர் பாணியில் அதிமுக எம்எல்ஏவாகவே இருந்து கொண்டே திமுகவை ஆதரித்துக் கொண்டுள்ளார் ராதாகிருஷ்ணன்.
இந் நிலையில் ஜெயங்கொண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் அந்தக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
ஜெ பேரவை செயலாளர் பதவி பறி்ப்பு:
இந் நிலையில் முதல்வரை சந்தித்த எம்எல்ஏ ராஜேந்திரன் வசம் உள்ள கட்சிப் பொறுப்பை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பறித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications