திமுக-காங். குறித்து உள்நோக்க செய்திகள்-டி.ஆர்.பாலு கண்டனம்
சென்னை: சோனியா காந்தி, ஜெயலலிதா சந்திப்புக்கு நவீன் சாவ்லாதான் ஏற்பாடு செய்தார் என்று உள்நோக்கத்துடன் செய்திகள் வெளியிடுவதன் மூலம் திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க நினைக்கும் முயற்சிகள் பலிக்காது என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து, டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பத்திரிகைகளில் வெளியான செய்தி மிகவும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகவே திமுக கருதுகிறது. இந்தச் செய்திக்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வரும் நல்லுறவு பாதிக்கும் வகையில் பரப்பப்படும் எந்தவித தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்களை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்.
இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை பரப்புவோரின் எண்ணங்களும், எதிர்பார்ப்பும் ஈடேறப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
சோனியா காந்தி, ஜெயலலிதா சந்திப்புக்கு வேண்டும் என்றே நவீன் சாவ்லா ஏற்பாடு செய்தார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார். இதை மேற்கோள் காட்டி முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
இதை மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதைக் குறிப்பிட்டுத்தான் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று சென்னைக்கு வந்திருந்த காங்கிரஸ் செயலாளர் சாந்தாராம் நாயக் கூறுகையில், கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளால் இந்த கூட்டணியைப் பிரிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications