தமிழகத்தில் கொசுவை ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பரவி வரும் பல்வேறு காய்ச்சல்களுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்மக் காய்ச்சலுக்கு பலர் பலியாகியுள்ளனர்.
இவை டெங்கு மற்றும் சிக்குன்குன்யா என்று சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் மர்மக் காய்ச்சலுக்குப் பலியானதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் காய்ச்சல் பற்றி தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
கடந்த டிசம்பர் மாதத்தில் 2.93 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். சுகாதாரத் துறை எடுத்த கொசு ஒழிப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால், இக்காய்ச்சல் வெகுவாக குறைந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மற்றும் மேலப்பாளையம் பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் அதிக அளவில் காய்ச்சல் பரவியிருந்தது. இதுபோல் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
டெல்லியில் இருந்து தேசிய பூச்சியினால் பரவக்கூடிய நோய்கள் கட்டுப்பாட்டு மையம், புனேதேசிய நுண்ணுயிரியல் மையம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்று பரிசோதித்தார்கள். இதில் சிலருக்கு டெங்கு மற்றும் சிக்குன்குனியா இருப்பது உறுதியானது. தமிழகத்தில் புதுவித காய்ச்சல் எவருக்கும் இல்லை என்பது தெரியவந்தது.
கொசு ஒழிப்புப் பணியில் தீவிரம்...
இந்த ஆய்வின்போது, கொசு ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
மேலும், சென்னை மாநகராட்சியில் குறுகிய காலத்தில் செயல்படுத்தும் கொசு ஒழிப்புத் திட்டம் ஒன்றையும், நீண்டகால கொசு ஒழிப்புத் திட்டம் ஒன்றையும் தயாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் கொசுத் தொல்லையை ஒழிக்காமல் சென்னை மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது, அதை திமுக கிண்டலடித்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications