அடுத்து போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி சிக்குகிறார் - போலீஸ் வலை விரிப்பு
சென்னை: போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி சிக்கியுள்ள நிலையில் அடுத்து சென்னை நகரில் உலா வரும் போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனராம்.
சமீபத்தில் சென்னை நகர காவல்துறையினரிடம் தன்னை எஸ்.பி. எனக் கூறிக் கொண்டு சாருலதா என்ற இளம் பெண் பெரும் அட்டகாசம் செய்து பல லட்சம் பணத்தையும் சுருட்டிய சாகசச் செயல் அனைவரையும் அதிர வைத்தது.
குறிப்பாக காவல்துறையினரையே அவர் மிகத் திறமையாக ஏமாற்றிய செயல் காவல்துறையினருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் அந்த போலியை போலீஸார் வலை விரித்துப் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது ஒரு போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நடமாடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்தப் பெண் டெல்லியிலிருந்து வந்துள்ளாராம். தன்னை பிரதமரின் செயலாளர் என்று கூறிக் கொண்டு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பேசியுள்ளார். ஆனால் அவர் ஒரு போலி என்பதை கமிஷனர் கண்டுபிடித்துள்ளார்.
சாருலதாவைப் பிடித்தது போல இந்தப் பெண்ணையும் வளைத்துப் பிடிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த டுபாக்கூர் ஐஏஎஸ் அதிகாரியைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
விரைவில் இந்த போலியும் பிடிபடுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications