மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் பயணிக்க பயணிகள் ஆர்வம்- வசதியை அதிகரிக்க முடிவு
டெல்லி: ரயில்களில் மூன்றடுக்கு ஏசி படுக்கை வசதியை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில்களில் முன்பெல்லாம் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்குத்தான் அதிக டிமாண்ட் இருக்கும். வசதி படைத்தவர்கள் மட்டுமே ஏசி பெட்டிகளில் அதிகம் பயணிப்பர்.
ஆனால் தற்போது அனைத்துத் தரப்பினரும் ஏசி பெட்டிகளை நாட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மூன்றடுக்கு ஏசி வகுப்பில் பயணிக்க கூட்டம் அலை மோதுகிறது. இதற்கு முக்கிய காரணம், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் கிடைப்பதில் கிராக்கி நிலவுவதும், சவுகரியமாக போகலாமே என்ற எண்ணத்திலும்தான்.
இதைக் கருத்தில் கொண்டு மூன்றடுக்கு ஏசி படுக்கை வசதியை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போவதால் இந்த முடிவு.
இந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மூன்றடுக்கு ஏசி வகுப்பில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துள்ளதாம். மற்ற வகுப்புகளை விட இது அதிகம்.
எனவே மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் படுக்கை வசதியை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதை படிப்படியாக அமல்படுத்தவும் அது முடிவு செய்துள்ளது.
22 முதல் 24 பெட்டிகள் உள்ள ரயில்களில், ஆண்டு முழுவதும் கிராக்கி அதிகம் உள்ள ரயில்களில் 10 முதல் 12 பெட்டிகள் வரை இனிமேல் மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இடம் பெற வாய்ப்புள்ளதாம்.
வருவாய் அடிப்படையில், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் பயணம் செய்தோர் மூலம் ரயில்வேக்கு 2008-09ம் ஆண்டில், ரூ. 3.116 கோடி வருவாய் கிடைத்துள்ளதாம்.
அதேசமயம், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியயைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 8 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.
வருகிற ரயில்வே பட்ஜெட்டில் மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் தயாரிப்பை அதிகரிக்கும் அறிவிப்பு இடம் பெறக் கூடும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே பெருகி வரும் கிராக்கியைக் கருத்தில் கொண்டு வடக்கு ரயில்வே தற்போது உள்ள 150 ரயில்களை முழுக்க ஏசி பெட்டிகளைக் கொண்ட ரயில்களாக மாற்றுவது குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications