காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் கல்யாணம்- திருச்சியில் பரபரப்பு
திருச்சி: காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த செயலால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காதலர் தினம். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்ளை அவை அறிவித்திருந்தன. இவற்றிலும் பெரும்பாலானவை பப்ளிசிட்டிக்காக நடத்தப்படுவதைப் போல இருந்தது. காரணம், போராட்டம் நடத்திய பெரும்பாலான அமைப்புகள் மக்களிடையே பிரபலமாகாத குட்டி குட்டி அமைப்புகள்.
இந்து திராவிட மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் சார்பில் திருச்சி பீமநகர் மந்தைவெளி பகுதியில் ஒரு ஆண் நாய்க்கும், ஒரு பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மாநகர் மாவட்ட அமைப்பாளர் தளவாய் ராஜேஷ் தலைமையில் நடந்த இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் ஆண் நாய் கழுத்தில் மாலை போட்டு ஐ லவ்யூடா செல்லம் என்ற போர்டும், பெண் நாய் கழுத்தில் செருப்பால் அடி என்று போர்டும் மாட்டப்பட்டு இருந்தது.
காதலை நாய்களே விரும்பாத நிலையில் இளம் பெண்கள், வாலிபர்கள் காதலால் சீரழிந்து வருவதாக சித்தரித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
காதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெ.தி.க. கொடுத்த ரோஜா...
அதே திருச்சியில், பெரியார் திராவிடர் கழகத்தினர் காதலர்களுக்கு ரோஜா பூ கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
அந்த கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கட்சி தொண்டர்கள் இன்று காலை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் முன்பு திரண்டனர். காதலர் ஆதரவு பேனர்களை பிடித்தபடி நின்ற அவர்கள் கோவிலுக்கு சென்ற காதல் ஜோடிகளுக்கு ரோஜா மற்றும் இனிப்பு கொடுத்து வாழ்த்து கூறினார்கள்.
சில ஜோடிகள் வெட்க புன்னகையுடன் அந்த ரோஜாவை வாங்கிக் கொண்டனர். சில ஜோடிகள் இவர்களை கண்டதும் விலகி ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் திருச்சி போலீஸ் துணை கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா, உதவி கமிஷனர் சீனிவாசன், கோட்டை இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் ஆகியோர் அங்கு வந்தனர்.
ரோஜா கொடுத்துக் கொண்டு இருந்த ராஜேந்திரன் மற்றும் தொண்டர்கள் காதலர்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.
உடனே அவர்கள் நாங்கள் காதலர்களுக்கு ஆதரவுதானே கொடுக்கிறோம், எங்களை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்குப் போலீஸார், எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது, ஆதரவும் தெரிவிக்க கூடாது. இதுவும் காதலர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றபடியே அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்று விட்டனர்.
தேவையற்ற வேலை - பாஜக
இந்த நிலையில், காதலர் தினமே தேவையில்லாத ஒன்று என்று பாஜக என்று கூறியுள்ளது.
ஜனசங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தீனதயாள் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இல.கணேசன் தலைமை தாங்கினார். எஸ்.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
அப்போது பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவை இன்று நாடு முழுவதும் அரங்கேற்றுகிறார்கள். காதல் என்பது மனிதன் பிறந்தது முதல் சாகும் வரை இருக்கும். அன்பு, பாசம் என்பது மனிதனோடு பிறந்தது.
அதற்கு கவர்ச்சியாக பெயர்சூட்டி நடுரோட்டில், நாலுபேர் கூடும் இடங்களில் வரம்புமீறி நடப்பதை காதல் என்றும், அதற்கு ஒரு அங்கீகாரம் அளிப்பதும் தேவையற்றது. காதலர் தினம் தவிர்க்கப்பட வேண்டும்.
பொதுவாகவே ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தினமாக கூறுகிறார்கள். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு முதியோர் தினம் கொண்டாடுவது, பெற்ற தாயை கவனிக்காமல் இருந்து விட்டு அன்னையர் தினம் கொண்டாடுவது. இவையெல்லாம் தேவை தானா?
ஒவ்வொருவரிடமும் பண்பு, நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எந்த வீட்டு பெண்ணையும், தகப்பனுக்கு தெரியாமல் யாரும் கூட்டி செல்லலாம். அதற்கு பெயர் காதல் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
நமக்கென்று தனி பண்பாடு, கலாச்சாரம் இருக்கிறது. அதை போற்ற வேண்டும். உழைப்பை பெருமைபடுத்தும் விவசாயிகள் தினம், கல்வியை போற்றும் கல்விதினம், ஆசிரியர்களை போற்றும் ஆசிரியர் தினம், நல்ல தலைவர்களை நினைத்து பார்க்கும் தலைவர்கள் தினம் கொண்டாடுகிறோம். இது வரவேற்கத்தக்கது.
இளைஞர்கள் சுய முன்னேற்றத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications