'ஓடும்' எம்.எல்.ஏக்களுக்கு பிரேக் போட ஜெ. முயற்சி - எல்லாருக்கும் மீண்டும் சீட் என உறுதி!

அதிமுகவின் நிலை வர வர மிகப் பரிதாபமாகி வருகிறது. எம்.ஜி.ஆர். கட்சியா இது, திமுக தலைவர் கருணாநிதி பார்த்து நடுங்கிய அதிமுகவா இது என்று எல்லோரும் வியந்து போகும் அளவுக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
அம்மா அம்மா என்று உருகிக் கொண்டிருந்தவர்கள் இப்போது திமுகவுக்குப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஓடலை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.வி.சண்முகம்தான்.
மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு ஜெயலலிதாவை அதிர வைத்தார். ஆனால் அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதற்குள் மரமணடைந்து விட்டார்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் கேம்ப் மாறினார். ஆனால் அவரை ரொம்ப காலம் கழித்துதான் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அவருடன் சேர்த்து அனிதா ராதாகிருஷ்ணனையும் தூக்கினார். சேகர் திமுகவுக்கு அனுதாபியாக இருக்கிறார். அனிதா திமுகவில் சேர்ந்து மீண்டும் திருச்செந்தூரில் நின்று வென்றுள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரைப் பார்த்து வணங்கி புதிய பாதைக்கு அஸ்திவாரம் போட்டு விட்டுத் திரும்பினார்.
இப்போது ஜெயங்கொண்டம் அதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனும் முதல்வர் கருணாநிதியைப் பார்த்து நானும் வர்றேன் என்று மறைமுகமாக கூறி விட்டு வந்திருக்கிறார்.
இதனால் ஜெயலலிதா பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். கட்சியில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 61 இடங்களில் வென்றது. ஆனால் தற்போது அதன் வசம் இருப்பவர்கள் 55 பேர் மட்டுமே.
தற்போது விலகிச் செல்லும் எம்.எல்.ஏக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு மீண்டும் சீட் தரப்படும் என ஜெயலலிதாவிடமிருந்து உறுதி போயுள்ளதாம்.
மீண்டும் சீட் தரப்படும் என்ற உறுதி்மொழி அனைத்து மாவட்ட செயலாளர்கள் மூலம் எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
அதிமுக வரலாற்றில் இப்படி இறங்கிப் போய் உத்தரவாதம் தருவதெல்லாம் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதுதவிர அதிமுக தலைமைக் கழக செயலாளர் செங்கோட்டையன், ஜெயலலிதா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன், இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சி எம்எல்ஏக்களையும், மாவட்ட செயலாளர்களையும் சந்தித்து பேசி வருகிறார்களாம்.
ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்குக் கை கொடுக்கும் என்று தெரியவில்லை.
விரிக்கப்படும் 'வலை'யும், அதில் இருக்கும் 'இரை'யும் மிகப் பெரிதாக இருப்பதால் விழும் 'மீன்களின்' எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications