ஜெ.வுக்கு அகில உலகப் புளுகுராணி பட்டமே கொடுக்கலாம் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரும்பு விவசாயிகள் தொடர்பாக விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தின்போது பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதற்காக அவருக்கு அகில உலகப் புளுகு ராணி என்ற பட்டமே கொடுக்கலாம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சரிந்து வரும் தனது செல்வாக்கை மீண்டும் சரி செய்து எப்படியாவது மீண்டும் முதல்-அமைச்சராகி விட வேண்டும் என்று கனவு காணுகின்ற ஜெயலலிதா, அந்தக்கனவை நன வாக்குவதற்காக ஏதோ ஒரு பிரச்சினையைப் பூதாகாரப்படுத்திக் கொண்டு, மிச்சம் இருக்கிற தன்னுடைய சேனாதிபதிகளை விட்டு ஆங்காங்குள்ள கட்சிக்காரர்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரால் கூட்டச் செய்து உள்ளார்.

அந்தக் கூட்டத்தில் தமது ஆட்சிக்கால வீர தீர பிரதா பங்களைச் சொல்வதோடு- தி.மு.க. ஆட்சியில் பொது மக்களுக்கும், ஏழை எளியோருக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும், பொதுவாக அடித் தட்டு மக்களுக்கும் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையெல்லாம் மறைத்து விட்டு, பொய்யும் புளுகுமாக தனது விஷமப் பிரச்சாரத்தை ஒரு சில பத்திரிகைகளின் உதவியோடு நடத்தி வருகிறார்.

அதில் ஒன்று தான் அண்மையில் அவர் விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகளுக்காக வடித்த கண்ணீராகும். அந்தப் புலம்பல் பாட்டில் பல்லவியாக 2005-2006ஆம் ஆண்டுக்கான அரவைப்பருவத்திற்கு ஜெயலலிதா, கரும்புக்கு குறைந்தபட்ச விலையாக மத்திய அரசு அறிவித்த 795 ரூபாயுடன் தனது அரசின் ஆதார விலையாக 219 ரூபாயும் சேர்த்து, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 1,014 ரூபாய் வழங்க உத்தரவிட்டதாக விழுப்புரத்தில் ஒரு பொய்யை உதிர்த்திருக்கிறார்.

உண்மை என்னவென்றால், 2005ஆம் ஆண்டுக்கு முன்பு 2001ஆம் ஆண்டு முதல் அவர் தான் தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது எந்த ஆண்டிலாவது மத்திய அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச விலையை விட ஒரு பைசாவாவது கூடுதலாக கரும்புக்கு அவர் ஆட்சியிலே வழங்கப்பட்டது உண்டா என்பதற்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். இல்லை - இல்லை - இல்லை என்பது தான் கரும்பு விவசாயிகளின் பதிலாகும்.

ஐந்தாண்டு கால ஆட்சியில், நான்காண்டுகளில் ஒரு பைசா கூட உயர்த்த ஜெயலலிதா மறுத்து விட்டு, கடைசி ஆண்டான 2005இல் மட்டும், அதுவும் அது தேர்தல் ஆண்டு என்பதால், கரும்பு விவசாயிகளை ஏமாற்றுவதற்காக விலையை உயர்த்துவதாக அறிவித்தார்.

அப்படி அறிவித்தாரே தவிர, அவர் ஆட்சியிலிருந்து இறங்கும் வரையில் அந்த விலையை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை. தி.மு.க 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தான் அந்தத் தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என்பதை ஜெயலலிதாவினால் மறுக்க முடியுமா?

அது மட்டுமல்ல; ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2003-04ஆம் ஆண்டில் மத்திய அரசு நிர்ணயித்த கரும்புக்கான குறைந்தபட்ச விலையைக் கூட 3 மாதம் வரையில் தாமதித்து, அதன் பிறகு தான் ஜெயலலிதா அரசு வழங்கியது.

விழுப்புரத்தில் அடுத்து ஒரு பொய்யை அம்மையார் அவரது பேச்சில் அடுக்கிக் காட்டியிருக்கிறார். கரும்பு விவசாயிகளுக்கான வாகன வாடகையை அந்தந்த ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருடைய ஆட்சிக்காலத்திலே தான் முதன் முதலாக உத்தரவு பிறப்பித்தோம் என்றும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார்.

உண்மை என்ன? தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலாக கரும்பு விவசாயிகளுக்கான வாகன வாடகை எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்ற பாகுபாட்டையெல்லாம் பார்க்காமல் அனைத்துக் கரும்பு விவசாயிகளுக்கும் 2006-2007ஆம் ஆண்டிலே தான் சராசரி டன் ஒன்றுக்கு 90 ரூபாய் வீதம் வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு முதலில் கூட்டுறவு ஆலைகளுக்கும், பொதுத்துறை ஆலைகளுக்கும் என்றிருந்தது. இந்த ஆண்டு 2009-2010இல் தனியார் ஆலைகளும் இந்த வாகன வாடகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டு அதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இமாலய புளுகு ஒன்றையும் இந்த அம்மையார் ஜோடித்து, அதாவது மத்திய அரசு கரும்பிற்கான குறைந்த பட்ச விலையை கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.503.40 என்ற அளவுக்கு உயர்த்தியிருந்தது என்றும், ஆனால் தி.மு.க. அரசோ 80 ரூபாய் அளவுக்கு மாநில அரசின் ஆதார விலையை குறைத்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.

பாவம் யாரோ ஒரு அண்டப் புளுகர் அவருக்கு எழுதிக் கொடுத்த தவறான புள்ளி விவரத்தை, இந்த ஆகாயப் புளுகர் விழுப்புரத்தில் பரப்புரையாற்றியிருக்கிறார்.

2005-2006ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.795. 2009-2010ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.1,298.40 அதாவது 503.40 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்பது உண்மை.

தமிழக அரசு மத்திய அரசு நிர்ணயம் செய்ததை விட 2005-2006ஆம் ஆண்டில் 219 ரூபாயும், 2006-2007ஆம் ஆண்டில் 222.50 ரூபா யும், 2007-2008ஆம் ஆண்டில் 222.20 ரூபாயும், 2008-2009ஆம் ஆண்டில் 238.20 ரூபாயும், 2009-2010ஆம் ஆண்டில் 359.80 ரூபாயும் கூடுதலாகத் தான் விலை நிர்ணயம் செய்திருக்கிறதே தவிர, எந்த ஆண்டிலும் 80 ரூபாய் குறைத்து விலையை நிர்ணயம் செய்யவில்லை.

அதாவது, 2005-2006இல் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ. 795 என்பது தற்போது தமிழக அரசினால் 642.40 கூடுதலாக சேர்த்து - இந்த ஆண்டு கரும்புடன் ஒன்றுக்கு 1,437.40 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர தமிழகத்திலே மேலும் கூடுதலாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 90 வாகன வாடகையாகவும் தரப்படுகிறது. எனவே, மத்திய அரசை விட ஆதார விலையை மாநில அரசு 80 ரூபாய் குறைத்து விட்டது என்று விழுப்புரத்தில் ஜெயலலிதா பேசியிருப்பதைப் பார்க்கும்போது அம்மையாருக்கு அகில உலக புளுகு ராணி என்று பட்டமும் கொடுக்கலாம் அல்லவா?

ஜெயலலிதா ஆட்சியில் 2005-2006ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி அளவு 21.38 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது என்றும், 2008-2009ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்தியின் அளவு 16.16 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்தது என்றும் ஜெயலலிதா விழுப்புரத்தில் பேசியிருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சர்க்கரை உற்பத்தி 2003-04 ஆண்டில் 9.20 இலட்சம் மெட்ரிக் டன்களாகவும், 2004-05 ஆண்டில் 11.09 இலட்சம் மெட்ரிக் டன்களாகவும் குறைந்த அளவிலேயே இருந்தது.

இதை அப்படியே மறைத்து விட்டு, 2005-2006ஆம் ஆண்டு எவ்வளவு உற்பத்தி என்பதை மட்டும் கூறி மக்களை ஏமாற்றப்பார்க்கிறார். அதைப் போலவே, கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 2006-07ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 25.39 இலட்சம் மெட்ரிக் டன்களாகவும், 2007-08ஆம் ஆண்டில் அது 21.41 லட்சம் மெட்ரிக் டன்களாகவும் சர்க்கரை உற்பத்தி உயர்ந்துள்ளது.

2006-2007ஆம் ஆண்டு சர்க்கரை உற்பத்தி 25.39 லட்சம் மெட்ரிக் டன் என்பது, கடந்த பத்தாண்டு காலத்தில் உற்பத்தியாகாத அளவிற்கு அதிக அளவிற்கான சர்க்கரை உற்பத்தியாகும்.

இந்த உண்மையையெல்லாம் மறைத்து விட்டு, 2008-09இல் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டதை கணக்கிலே எடுத்துக் கொண்டு ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

எனவே, இப்போது எனக்கு மட்டுமல்ல; கரும்பு விளைவிக்கும் எனதருமை விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் எழுகின்ற கேள்வி - இப்போது விழுப்புரத்திற்கு வந்து பேசியிருப்பது முன்னாள் முதல்வரா? அல்லது எந்நாளும் விவரமின்றி உளறுகின்ற விதூஷக மகாராணியா என்பது தான் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+