விரைவில் புதிய ஜவுளிக் கொள்கை - கருணாநிதி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் விரைவில் புதிய ஜவுளிக் கொள்கை வெளியிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பருத்தி ஆடைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (டெக்ஸ்ப்ரோசில்) சார்பில், 2008-09-ம் ஆண்டுக்கான டெக்ஸ்ப்ரோசில் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பருத்தி ஆடைகள் ஏற்றுமதியில் சாதனை படைத்த நிறுவனங்களுக்கு இந்த விழாவில் விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
ஜவுளித் துறையைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அளவில் 47 சதவீத நூற்புத் திறனையும், 20 சதவீத விசைத்தறி நெசவுத்திறனையும், 17 சதவீத கைத்தறி நெசவுத் திறனையும், 75 சதவீத பின்னலாடை தயாரிப்புத் திறனையும் தமிழகம் கொண்டுள்ளது.
மாநிலத்தில் இத் துறையை மேலும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
கைத்தறி மற்றும் விசைத்தறி ஆலை தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் கைத்தறி நல வாரியம் மற்றும் விசைத்தறி நல வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரமும், விசைத்தறி ஆலைகளுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரமும் அளிக்கப்படுகிறது.
ரூ.300 கோடி மதிப்பிலான இலவச வேட்டி, சேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் 20 ஆயிரம் விசைத்தறி ஆலைகளுக்கும், 15 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களுக்கும் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழக ஜவுளித் துறை மூலம் 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். சர்வதேச போட்டிகளை தமிழக ஜவுளித் துறை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை அரசு வகுத்து வருகிறது.
குமாரபாளையம், கடலூர், வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, கரூர் ஆகிய 5 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக ஜவுளித் துறையில் மற்ற மாநில மற்றும் வெளிநாடுகளின் முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் புதிய ஜவுளிக் கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது" என்றார் முதல்வர்.
விழாவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.












Click it and Unblock the Notifications