அதிமுக உதவியுடன் ராஜ்யசபா எம்பி ஆவாரா வைகோ?

அதிமுக சார்பில் தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி தினகரன், மலைச்சாமி, அன்பழகன், என்.ஆர்.கோவிந்தராஜன் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த சுதர்சனம் நாச்சியப்பன், பாமகவைச் சேர்ந்த அன்புமணி ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.
இவர்களுக்கு பதிலாக தமிழகத்தில் இருந்து புதிதாக ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் 4 பேரைத் தேர்வு செய்ய முடியும்.
அதிமுக-மதிமுக கூட்டணி சார்பாக இருவரைத் தேர்ந்தெடுக்கலாம்.
திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு 138 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும்.
அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 73 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
திமுகவில் தங்களுக்கு 2 காங்கிரசுக்கு இரண்டு என பிரித்துக்கொள்ள தி்ட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல மீதமுள்ள 2 இடங்களை அதிமுகவும், மதிமுகவும் தலா ஒரு சீட் என பிரித்துக் கொள்ளலாம் எனத் தெரிகிறது.
இந்த இரண்டில் ஒரு சீட்டைத்தான் பாமகவுக்குத் தருவதாக லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூறி, ஒப்பந்தமும் செய்திருந்தது. ஆனால் பாமக கூட்டணியை விட்டு ஓடி விட்டதால், அந்த சீட்டை மதிமுகவுக்கு ஜெயலலிதா தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி தரப்பட்டால் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை வைகோ போட்டியிடுவதாக இருந்தால் திமுக தரப்பில் ஏதேனும் உள்ளடி வேலைகள் நடத்தி, வைகோவின் வெற்றியை தடுக்க முயற்சிகள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications