புனே குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது- துப்பு துலங்குகிறது

Subscribe to Oneindia Tamil

Pune Blast
டெல்லி: புனே குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த தீவிரவாதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புனே குண்டுவெடிப்பு தொடர்பாக அவுரங்காபாத்தைச் சேர்ந்த இருவரும், புனே நகரின் குடல்வாடி மறறும் ஜன்வாடி பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புனே போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்தேகப்படும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் நான்கு பேரை பிடித்துள்ளோம்.

மேலும், ஜெர்மன் பேக்கரிக்கு எதிரில் உள்ள ஹோட்டலில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளும் விசாரணைக்கு உதவியாக உள்ளன. அதில் இரண்டு பேர் ஜெர்மன் பேக்கரிக்குள் பையுடன் சென்று வெறும் கையுடன் திரும்பிய காட்சி இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து சில முக்கிய துப்பு கிடைத்துள்ளது.

தடயவியல் அறிக்கையும் வந்துள்ளது. அதில் குண்டுவெடிப்புக்கு ஆர்டிஎக்ஸ் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தர இரண்டுடன் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன் எண்ணையை கலந்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை இன்று 10 ஆக உயர்ந்தது. காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.

ஹெட்லியின் தொடர்புகள்...

புனே குண்டுவெடிப்பில் அமெரிக்காவில் கைதான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹெட்லிக்குத் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் கிட்டத்தட்ட உறுதியாகி வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் சிகாகோவில் வைத்து தீவரவாதி ராணாவுடன் சேர்த்து அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் ஹெட்லியைக் கைது செய்தனர்.

இருவருக்கும் மும்பைத் தாக்குதலில் தொடர்புள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹெட்லி அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில், கராச்சி திட்டம் என்ற லஷ்கர் இ தொய்பாவின் தீவிரவாத சதித் திட்டம் குறித்து விளக்கியுள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி இந்திய முஸ்லீம்களையும், பாகிஸ்தான் முன்னாள் ராணுவத்தினரையும் அமைப்பில் சேர்த்து அவர்கள் மூலம் இரு நாடுகளிலும் அல்லது இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதே இந்த கராச்சித் திட்டமாகும்.

கராச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே புனே சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கராச்சித் திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

புனே சம்பவத்தை கடந்த 2005ம் ஆண்டு லஷ்கர் உருவாக்கிய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை வைத்து நடத்தியிருப்பதாகவும் உறுதியாகி வருகிறது.

இந்தியாவில் உள்ள தீவிரவாதப் போக்குடைய முஸ்லீம் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களை செய்யவே இந்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை லஷ்கர் உருவாக்கியது.

இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர்களாக ரியாஸ் பத்கல், இக்பால் பத்கல் மற்றும் மோஷின் செளத்ரி ஆகியோர் உள்ளனர்.

சபாத் இல்லம் - ஒஷோ ஆசிரமம்தான் முக்கிய குறி...

புனே சம்பவத்தில் முதலில் தீவிரவாதிகள் குறி வைத்திருந்தது யூதர்கள் கூடும் மையமான சபாத் இல்லம் மற்றும் ஓஷோ ஆசிரமம் ஆகியவைதான்.

இந்த இரு இடங்களையும் ஏற்கனவே ஹெட்லி நேரில் வந்து பார்வையிட்டு நோட்டமிட்டுச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று இந்த இடங்களில் குண்டு வைக்கத்தான் தீவிரவாதிகள் வந்துள்ளனர். ஆனால் ஹெட்லி வந்து போன இடம் என்பதால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் இந்த இடங்களை தீவிரவாதிகளால் நெருங்க முடியவில்லை. இதையடுத்து கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றிக் கொண்டு ஜெர்மன் பேக்கரிக்கு சென்றுள்ளனர்.

இந்த பேக்கரிக்கு வெளிநாட்டுக்காரர்கள் அதிக அளவில் வந்து போவதால் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் சம்பவ நாளன்று இரவு 7 மணிக்கு ஓஷோ ஆசிரமத்தில் நடைபெற்ற தியான வகுப்புக்காக பேக்கரிக்கு வந்திருந்த வெளிநாட்டவர்கள் பெரும்பாலானோர் கிளம்பிப் போய் விட்டனர்.

ஒருவேளை குண்டு வெடித்தபோது அவர்கள் அங்கிருந்திருந்தால் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். கூட்டம் சற்று குறைவானதாக இருந்ததால்தான் உயிரிழப்பு குறைந்துள்ளது.

ஹெட்லியின் வேவு ரேடாரில் புனே தவிர நாக்பூர் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் 2ம் நிலை நகரங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் வெளிநாட்டினர் அதிக அளவில் வரும் இடங்கள் ஆகும்.

ஹெட்லியின் இமெயில் தகவல்கள் வெளியீடு...

இந்த நிலையில், ஹெட்லிக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இடையிலான இமெயில் பரிவர்த்தனைகள் அமெரிக்க புலனாய்வு அமைப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ராகுல் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

உண்மையில் ராகுல் என்பது தனி நபரின் பெயர் அல்ல. மாறாக, புனே என்பதைத்தான் ராகுல் என்று கோட் வேர்ட் ஆக பயன்படுத்தியுள்ளனர்.

அந்த விவரம்...

ஜூலை 8, 2009
ஹெட்லி டூ லஷ்கர்

நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், கடைசியாக நாம் போன இடத்திற்கு சென்று ஹாய் ராகுல் என்று சொல்ல வேண்டும்.

ஜூலை, 8, 2009
லஷ்கர் டூ ஹெட்லி

ராகுலை மீண்டும் பார்ப்பது நல்ல யோசனைதான். அங்கு உனக்கும் சில வேலைகள் உள்ளன. அதில் முன்னேறிச் செல்ல நல்ல வாய்ப்புகள் உள்ளன.

ஜூலை, 9, 2009
ஹெட்லி டூ லஷ்கர்

முன்னேறிச் செல்லலாம் என்றால் நீ ராகுலை நோக்கிச் செல்லக் கூறுகிறாயா அல்லது வடக்கு (மும்பை) நோக்கி செல்லக் கூறுகிறாயா?

ஜூலை, 9, 2009
லஷ்கர் டூ ஹெட்லி

ராகுலை நோக்கித்தான்.

இதை வைத்துப் பார்க்கும்போது புனேவை லஷ்கரும், ஹெட்லியும் குறி வைத்திருந்தது ஊர்ஜிதமாகிறது.

புனே சம்பவத்தில் இந்தியன் முஜாஹிதீன்களின் பங்கு இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஹெட்லி, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்த தகவல்களின்போது பத்கல் சகோதரர்கள் குறித்தும் கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டுதான் இந்தியன் முஜாஹிதீனின் இருப்பு இந்தியாவுக்குத் தெரிய வந்தது. அந்த ஆண்டில், 21 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் பிடிபட்டனர். 2005 முதல் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் இவர்கள்.

2006ல் மும்பை ரயில்களில் நடந்த குண்டுவெடிப்பு, 2008ல் ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புளில் தொடர்புடையவர்கள் இவர்கள்.

கைது செய்யப்பட்ட 21 பேரில் 11 பேர் புனேவைச் சேர்ந்தவர்களாவர். இருப்பினும் பத்கல் சகோதரர்கள் மட்டும் பிடிபடாமல் தப்பி விட்டனர்.

2008ல் பிடிபட்ட முக்கிய நபர்களில் மன்சூர் பீர் பாய் என்பவரும் ஒருவர். புனேவில் உள்ள குரான் பவுண்டேஷனில்தான் தான் தீவிரவாதப் பாதைக்கு மாறும் அறிவுரையைப் பெற்றதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.

மேலும் புனேவை மையமாகக் கொண்டுதான் இந்தியன் முஜாஹிதீன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பத்கல் சகோதரர்கள், மோஷின் செளத்ரி தவிர, அப்துல் சுதான் குரேஷி, ஜைபுதீன் அன்சாரி ஆகியோரும் புனே சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறார்கள்.

பத்கல் சகோதரர்களுக்கும், மோஷின் செளத்ரிக்கும் இடையே இணைப்புப் பாலம் போல குரேஷி செயல்பட்டுள்ளார். பத்கல் சகோதரர்கள் பாகிஸ்தானில் இருந்தபடி இந்தத் தாக்குதலை கையாண்டதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, போலீஸ் வசம் ஏற்கனவே சிக்கியுள்ள ஷேஷாத் என்ற இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி உள்ளிட்ட சிலர், காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

ஷேஷாத் டெல்லியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த மாணவர் ஈரான் தீவிரவாதியா...?:

இதற்கிடையே, புனே குண்டுவெடிப்பில் இரண்டு வெளிநாட்டவர் பலியாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்களில் ஒருவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண். இன்னொருவர் ஈரானைச் சேர்ந்த மாணவர் செய்யது அப்துல் கானி. 26 வயதான இவர் புனேவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

இவருக்கும், தீவிரவாதிகளுக்கும் இருக்கலாமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இவர்தான் வெடிகுண்டைக் கொண்டு வந்தாரா, குண்டை வைத்தபோது தவறுதலாக வெடித்து விட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

கானியின் பின்னணி, அவரது விவரங்களை தற்போது போலீஸார் சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

புனே குண்டுவெடிப்பு: துப்பு கொடுத்தால் ரூ.1 கோடி:

இதற்கிடையே புனே குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

துப்புக் கொடுப்பவருக்கு சன்மானம் அளிக்கப்படுவதோடு அவரது பெயர், விவரமும் மிக ரகசியமாக வைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+