இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்-பிற நாட்டினருக்கு அல்-கொய்தா எச்சரிக்கை

புனேவில் நடந்துள்ள வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது அல்-கொய்தா. இதன்மூலம் இந்தியாவில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை சீர்குலைக்க அந்த அமைப்பு தீவிரமாக உள்ளது தெளிவாகிறது.
அடுத்த வாரம் டெல்லியில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில் பங்கேற்க 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் டெல்லி வரவுள்ளனர்.
புனே குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்திய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை அனுப்ப சில மேற்கத்திய நாடுகள் அச்சம் தெரிவிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த பயத்தை மேலும் அதிகரித்து போட்டிகளை சீர்குலைக்க அல்-கொய்தா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏசியா டைம்ஸ் இதழுக்கு அல்-கொய்தாவின் கமாண்டர் என்று கருதப்படும் இலியாஸ் காஷ்மீரி அனுப்பியுள்ள எச்சரிக்கையில்,
டெல்லியில் நடக்கும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளுக்கும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கும், காமன்வெல்த் போட்டிகளுக்கும் வீரர்களை எந்த நாடும் இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என்று எச்சரிக்கிறோம். பிற நாட்டினரும் இந்தியாவுக்கு வரக் கூடாது. அவ்வாறு வந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு.
காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகள் வெளியேறும் வரை, காஷ்மீரிகள் தங்களது எதிர்காலம் குறித்து சுய நிர்ணய உரிமை பெரும் வரை எங்களது தாக்குதல்கள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மத்திய உள்துறை, உளவுப் பிரிவினர், விளையாட்டுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், அடுத்த வாரம் தொடங்கும் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வரும் பல நாட்டு வீரர்களுக்கும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசாரின் பாதுகாப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களைத் தாக்குவோம் என்று சிவசேனை மிரட்டி வரும் நிலையில் அல்-கொய்தாவின் மிரட்டலும் சேர்ந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் இந்தியாவுக்குச் செல்லும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications