வேலை தருவதாக மோசடி: அதிமுக மாஜி மந்திரி மீது புகார்
ஈரோடு: ஆசிரியர் பணிக்காக பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி மீது பலர் புகார் கூறியுள்ளனர்.
ஈரோடு அருகே அம்மாப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்திக்கு சொந்தமான பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் ஆசிரியர் பணி ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருப்பது தெரிய வந்தது.
அவரிடம் ஆசிரியர் வேலைக்காக பவானி அடுத்த காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த கற்பகம் என்ற ஆசிரியை ரூ.2 லட்சம் கொடுத்தார். ஆனால் ஆசிரியர் வேலை கொடுக்காததால் பணத்தை திருப்பி கேட்டார்.
ஆனால் ஈஸ்வரமூர்த்தி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆசிரியை கற்பகம் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் ஈரோடு ஈஸ்வரன் வீதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போலீசார் வந்து சமரசம் செய்ததின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் அதே ஆசிரியர் வேலைக்காக நாங்களும் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளோம் எனக்கூறி அதே பகுதியைச் சேர்ந்த பிரியா மற்றும் சிவராமன், சுப்பிரமணியன், திருநாவுக்கரசு ஆகிய 4 பேர் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications