விமானத்தில் 'டபுள் டிக்கெட்' வாங்காத 'குண்டு பயணி' வெளியேற்றம்!
லாஸ்ஏஞ்சல்ஸ்: அளவுக்கு அதிகமாக உடல் பருத்துவிட்ட பயணி, இரண்டு டிக்கெட் வாங்க மறுத்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்தவர் கெவின் ஸ்மித். இவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஆக்லாந்தில் இருந்து பர்பாங்க் வரை பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், டிக்கெட் வாங்கிக்கொண்டு இருக்கையும் ஒதுக்கப்பட்ட பின்னர், தன்னை விமானத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றி விட்டதாக கெவின் குற்றம்சாட்டியுள்ளார்.
தான் குண்டாக இருப்பதை காரணம் காட்டி அதிகாரிகள் தன்னை விமானத்தில் இருந்து வெளியேற்றியதாக அவர் கூறினார்.
சவுத்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் விதிப்படி, குண்டாக இருப்பவர்கள் இரண்டு டிக்கெட் வாங்கவேண்டும். ஆனால் கெவின் ஒரு டிக்கெட் மட்டுமே வாங்கியிருந்தார்.
இதனால், கூடுதல் டிக்கெட் வாங்குங்கள் அல்லது விமானத்தை விட்டு இறங்குங்கள் என அதிகாரிகள் கெவினிடம் கறாராக பேசியுள்ளனர்.
ஒரு சீட்டில் என்னால் உட்கார முடியும், எப்படியாவது அட்ஜெஸ்ட் செய்து அமர்ந்துகொள்கிறேன் என கெவின் கூறியும் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளாமல் அவர் விமானத்தில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.
இதனால் வெறுப்படைந்த கெவின் விமான நிலையத்தில் பெரும் போராட்டமே நடத்தியிருக்கிறார். அதன் பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கெவினை வேறு விமானத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
பயணிக்கு அசௌகரியம் ஏற்படுத்தி விட்டதற்காக வருத்தம் தெரிவித்துள்ள சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் இதுபற்றி குறிப்பிடுகையில்,
'உங்களின் பயணத்தில் இடைஞ்சல் ஏற்பட்டதற்கு வருந்துகிறோம். ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக உடல் எடை கொண்டவர்களுக்கு இரண்டு டிக்கெட் என்ற விதிமுறை 20 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தில் உள்ளது.
மேலும், உடல் பருமனாக உள்ள பயணிகள், பொருந்தாத இருக்கையில் அமர்ந்து அவஸ்தை படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் கூடுதல் இருக்கை பெற்றுக்கொள்ள அறிவுறுத்துகிறோம்' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications