மருத்துவர் தேர்வுக்கு தனி தேர்வு வாரியம்- அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
மதுரை: அரசு மருத்துவர்களை பணி நியமனம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, மருத்துவர்களுக்கு தனி தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் கூறுகையில், 'தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம், மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படு வருகின்றனர்.
சிறப்பு விதிகளின்படி, தற்காலிக மருத்துவர்களும் நியமிக்கப்படுகின்றனர். தற்காலிக மருத்துவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர்.
ஆனால் மூன்று ஆண்டுகளாக, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தேர்வாணையம் தாமதமாகவும், மெத்தனமாகவும் நடந்து வருகின்றது. இந்த செயல் கண்டனத்திற்குரியது.
இந்த தேர்வு முடிவு வெளியானால் தான், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும். இரு ஆண்டுகளாக சேர முடியாமல், 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, உடனடியாக முடிவுகள் வெளியிட்டாலும், நேர்காணல் போன்ற நடைமுறை பிரச்னைகளால் இந்தாண்டும் சேரமுடியாத நிலை நீடிக்கிறது.
இது போன்ற குழப்பங்களையும், காலதாமத்தையும் தவிர்க்க மருத்துவர்களுக்கு தனி தேர்வு வாரியம் அமைக்க வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications