ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடிகளைத் தடுக்க தெற்கு ரயில்வே புதிய நடவடிக்கை
சென்னை: ரயில்களில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரீசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் என்ஜின்கள் அழகுப் போட்டி நடந்தது.
இந்த போட்டியில், தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்கள், ரயில்வே பணிமனையில் இருந்து 9 ரயில் பெட்டிகளும், 5 டீசல் என்ஜின்களும் கலந்துகொண்டன. தீபக் கிரிசன், அழகுப்போட்டியில் பங்கேற்ற ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் என்ஜின்களில் ஏறிச்சென்று பயணிகளுக்கும், ரயில் என்ஜின் டிரைவர்களுக்கும் என்னென்ன கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த போட்டியில் 12 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ரயில் பெட்டிகளும், 30 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட ரயில் என்ஜின்களும் புதுப்பிக்கப்பட்டு கலந்துகொண்டன. ரயில் பெட்டிகளில் தரைப்பகுதி மிகவும் சுத்தமாகவும், வண்ணமயமாகவும் காட்சியளிக்கிறது.
ஊனமுற்றோருக்கான கழிப்பறை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவசர விளக்கு, தண்ணீர் சுத்திகரிப்பு கருவி போன்றவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பெட்டிகளில் இருப்பதை போன்று மற்ற பெட்டிகளிலும் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
6 ரயில்வே கோட்டங்களில் உள்ள என்ஜினீயர்கள், ஊழியர்களின் திறமை, கற்பனைத் திறனை பெட்டிகளில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் மூலமாக பார்க்க முடிகிறது. பழைய ரயில் பெட்டிகளை நவீன பெட்டிகளை போல வடிவமைத்துள்ளனர்.
பெட்டிகளின் அழகு, செய்யப்பட்டுள்ள வசதிகளின் பயன்பாடு, மற்ற பெட்டிகளில் அந்த வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை அடிப்படையில் அழகுப் போட்டியில் பெட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
பெட்டிகளுக்கான போட்டி, டிவிஷன் அளவிலும், பணிமனை அளவிலும் நடத்தப்பட்டது. டிவிஷன் அளவில் சென்னை முதலிடத்தையும், திருச்சி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. ரயில்வே பணிமனை அளவில் நடந்த அழகுப் போட்டியில் திருச்சி பொன்மலை பணிமனையும், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸும் வெற்றி பெற்றன.
டீசன் என்ஜின்கள் அழகுப்போட்டியில் திருச்சி-பொன்மலை டீசல் ஷெட் முதலிடம் பிடித்தது. திருச்சி பொன்மலை பணிமனையும், ஈரோடு டீசல்ஷெட்டும் 2-ம் இடம் பிடித்தன. மொத்தத்தில் திருச்சி டிவிஷன் 4 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொண்டு ரயில் பெட்டிகளில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக செய்து தரப்பட்ட வசதிகள் பற்றி விரிவாக கலந்து ஆலோசித்து, படிப்படியாக அமல்படுத்தப்படும். ரயில் என்ஜினில் நவீன தொழில்நுட்பத்திற்கும், பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. டிரைவர் நீண்டதூரம் செல்லும்போது அலுப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கேபினில் ஏர்-கண்டிஷன் வசதி செய்யப்பட்டு உள்ளது. இது, டிரைவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கணினி முன்பதிவு மையங்களில் உள்ள கவுண்ட்டர்களில் அடிக்கடி அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்துகின்றனர். முறைகேடு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்பதிவு டிக்கெட் கொடுக்க யாராவது லஞ்சம் கேட்டால் அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கலாம்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொலைபேசி எண்கள் டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு அருகிலேயே எழுதி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி செய்தி ஊடகங்கள் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டை தடுக்க அவ்வப்போது வழிமுறைகளை மாற்றியும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
விழுப்புரம்-மயிலாடுதுறை அகல பாதையை ஆய்வு செய்ய விரைவில் வருமாறு ரயில்வே பாதுகாப்பு கமிஷனரை அழைத்துள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் அவரை அவசரப்படுத்த முடியாது. எப்படியும் மார்ச் மாதத்திற்குள் வந்து ஆய்வு செய்து விடுவார் என்று நம்புகிறோம்.
அந்த மாதத்திலேயே ரயில் போக்குவரத்து தொடங்கும் வாய்ப்பு உள்ளது. தென்மாவட்ட ரயில்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அந்த பகுதிகளுக்கு ஒவ்வொரு சீசனிலும் ஏராளமான சிறப்பு ரயில்களை இயக்குகிறோம். கடந்த ஆண்டு மட்டும் கூடுதல் பெட்டிகள் மூலம் 2 லட்சம் படுக்கைகள் கொடுத்திருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications