ஆஸி. வீரர்களை இங்கு விளையாட அனுமதிக்க மாட்டோம்- பால் தாக்கரே
மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மும்பையில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் சரத் பவாரின் கோரிக்கையை சிவசேனா தலைவர் பால் தாக்கரே நிராகரித்து விட்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் மும்பையில் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று தாக்கரே கூறி விட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் மகாராஷ்டிராவில் அவர்கள் விளையாடுவதை அனுமதிக்க மாட்டோம். இந்தியாவிலும் அவர்கள் விளையாடுவதை ஏற்க முடியாது என்று சிவசேனா அறிவித்தது.
இதையடுத்து சமீபத்தில் பவார் நேரில் போய் தாக்கரேவை சந்தித்து இந்த முடிவை விலக்கிக் கொள்ளுமாறு கோரினார். இதுகுறித்துப் பரிசீலிப்பதாக தாக்கரே கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வீரர்களை விளையாட அனுமதிக்க முடியாது என்று பால் தாக்கரே கூறி விட்டார்.
பந்த்ராவில் நடந்த கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பால் தாக்கரே பேசுகையில், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதை ஏற்க முடியாது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் தாக்கரே.












Click it and Unblock the Notifications