நான் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை- நரேஷ்குப்தா

Subscribe to Oneindia Tamil

Naresh Gupta
சென்னை: எனது கடமையை மட்டுமே செய்கிறேன். நடுநிலையோடுதான் செயல்படுகிறேன். யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை என்று கூறியுள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.

நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் நரேஷ் குப்தா. அப்போது முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பென்னாகரம் இடைத் தேர்தல் குறித்துத் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், பொங்கல் பண்டிகை 5 நாட்களுக்கு கொண்டாடப்படுவதாலும், பல்வேறு கட்சிகள் கேட்டுக்கொண்டதாலும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. 2010-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, பென்னாகரம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்பட்டது.

பென்னாகரம் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில், மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 536 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், ஆண்கள் 91 ஆயிரத்து 979 பேர். பெண்கள் 87 ஆயிரத்து 557 பேர் ஆவர்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, தங்களது பெயரை சேர்க்க வலியுறுத்தி, 32 ஆயிரத்து 770 விண்ணப்பங்கள் (பார்ம்-6) வந்தன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி நிறைய மனுக்கள் வந்ததைத் தொடர்ந்து, சரிபார்ப்புப் பணிக்காக, கூடுதலாக 25 ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

பெயர் சேர்ப்புக்காக வந்த மனுக்களை அதிகாரிகள் மீண்டும், மீண்டும் சரிபார்த்ததில், 19,500 பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு தகுதியுள்ளனவாக தெரியவந்தது.

இதுதவிர, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயரை சேர்க்கவும், கூடுதலாக உள்ள பெயர்களை நீக்கவும், பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்காகவும், தமிழகம் முழுவதும் வீடு, வீடாகச் சென்று 100 சதவீத வாக்காளர் பட்டியல் களசரிபார்ப்புப் பணி நடைபெற்றது.

இதில், பென்னாகரம் தொகுதியில் 3,394 பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு தகுதியுள்ளனவாகவும், அவை பட்டியலில் இல்லாததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். அந்த பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பென்னாகரம் தொகுதி வாக்காளர் பட்டியலில் 23 ஆயிரம் புதிய பெயர்கள் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது (இவர்களில் பெரும்பாலானோர் 19 வயது முதல் 24 வயதுக்குட்பட்டோர் ஆவர். 18 வயதை எட்டிய புதிய வாக்காளர்கள் மிகவும் குறைவு). ஆனால், முன்னர் அறிவிக்கப்பட்ட தேதியிலே அதாவது, 2010-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், மேற்கண்ட 23 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. 2006-ம் ஆண்டு தேர்தல் முடிந்தபிறகு, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது, தொகுதியில் தங்களது முகவரியில் வசிக்காதவர்கள், பெயர்களை அதிகாரிகள் நீக்கினார்கள். இது தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பிறகே, பெயர்கள் நீக்கப்பட்டன. பென்னாகரம் பகுதியில் வசிப்பவர்கள், பெங்களூர், ஓசூர், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு வேலை தேடி சென்றிருக்கும்போது, அவர்கள் தங்கள் வீடுகளில் இல்லாதபட்சத்தில் அவர்களது பெயர்களை நீக்கப்பட்டிருக்கக் கூடும்.

42 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதற்கு, சரியான முறையில் ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே உண்மையான விவரம் தெரியவரும். அதாவது, ஒவ்வொரு பெயரையும் வைத்து சரிபார்த்தால் மட்டுமே நீக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரியாக தெரியவரும். எனவே, அது பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இதற்காக, கோர்ட்டில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை வக்கீல் கேள்வி கேட்பது போல் என்னை மாறி, மாறி (நிருபர்கள்) கேள்விகளால் துளைக்கிறீர்கள். பென்னாகரம் தொகுதியில் வேண்டுமென்றே எந்த ஒரு பெயரும் நீக்கப்படவில்லை.

நான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் கூறப்படுவது பற்றி கேட்கிறீர்கள். அதுபோன்ற புகார்களை அவர்கள் (அரசியல் கட்சியினர்) கூறுவது வழக்கமானதுதான். நாங்கள் எங்களது பணிகளை பாரபட்சமின்றி நடுநிலையாகத்தான் செய்கிறோம். பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், சுயேச்சைகள், தனிநபர் என யார் கோரிக்கை வைத்தாலும் அதை நாங்கள் நியாயமான முறையில்தான் பரிசீலிக்கிறோம்.

எல்லோரையும் சமமாக கருதியே எங்களது கடமையை நடுநிலையோடு, பாரபட்சமின்றி செய்கிறோம். எந்தவொரு கட்சிக்கும் சாதகமாக செயல்படுவதில்லை. பாகுபாடு பார்ப்பதில்லை. நிலைமைக்கு தகுந்தவாறுதான், செயல்படுகிறோம் என்றார் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+