இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்-தனித் தனியாக போட்டியிடும் கட்சிகள்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளன. கூட்டணிகளும் மாறுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தது. ஆளும்கட்சி சார்பில் ராஜபக்சே போட்டியிட்டார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடவில்லை.
ஆளும்கட்சி வேட்பாளரான ராஜபக்சேவை எதிர்க்க ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினர். அதன்படி விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை நிறுத்தினர்.
அவருக்கு இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்கி பெரமுனா உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு கொடுத்தன. எனினும் தேர்தலில் பொன்சேகா தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 8-ந்தேதி இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. பொன்சேகா சிறையில் இருப்பதால் அவரது மனைவி அனேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடலாம் என்ற கருத்து நிலவியது.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்தனர். இந்த நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே பிரதமர் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு எனத் தனியாக வேட்பாளரை நிறுத்த இருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கூட தனியாக போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பை இழுக்க ராஜபக்சே முயற்சித்து வருகிறார்.
இந்தக் கூட்டணியின் எம்.பிக்களாக உள்ள சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் விஜயபாகு கருணாரத்னே தலைமையிலான இடதுசாரிக் கூட்டணியில் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல மனோ கணேசன் கட்சியும் தனியாக போட்டியிடவுள்ளதாம். ஜனதா விமுக்தி பெரமுனாவும் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே விடுதலைப் புலிகளால் துரோகி என பட்டம் சூட்டப்பட்டவரான கருணாவின் சகோதரியை தேர்தல் களத்தில் இறக்க ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளதாம்.
அதிபர் தேர்தலில் தமிழர் வாக்குகள் தனக்குக் கிடைக்காததால், நாடாளுமன்றத் தேர்தலில் அதை எப்படியாவது பெற்று விட ராஜபக்சேவும், அவரது தம்பி பசிலும் படு தீவிரமாக பல்வேறு உபாயங்களில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications