திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ அலுவலகம் சூறை!-திமுகவினர் கைவரிசை?
திண்டுக்கல்: திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து உண்ணாவிரதம் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதியின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
திமுகவினரின் தூண்டுதலால் இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவரும், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலபாரதி பிப்ரவரி 15ம் தேதி மக்கள் நலக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த உண்ணாவிரதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் என். பாண்டி , திண்டுக்கல் நகராட்சி துணைத் தலைவர் வ. கல்யாணசுந்தரம் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று அவரது எம்.எல்.ஏ. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது. பாலபாரதி உண்ணாவிரதம் மேற்கொண்டதால் தான் திமுகவைச் சேர்ந்தவர்களால் தூண்டிவிடப்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடும்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்முறையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications