வேலூர்: கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
வேலூர்: வேலூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் உள்ளது சரஸ்வதி வேலு பாலிடெக்னிக் கல்லூரி. இதில் 1,200 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பாலிடெக்னிக் கல்லூரியில், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தங்கும் விடுதிகள், வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்கள் எதுவுமே செய்து தரப்படவில்லை.
மேலும் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பது உட்பட பல்வேறு முறைகேடுகளில் கல்லூரி நிர்வாகம் ஈடுபடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தனுஷ் தலைமையில் மாணவர்கள் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி நிர்வாகம், அரசு அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை. மாறாக மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர்.
கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் போலீஸாரின் இந்த செயலுக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications