காதலிக்க மறுத்த பெண்ணின் காதை அறுத்த இளைஞர்
சென்னை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). கோடம்பாக்கம் சின்னராஜபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர். தந்தை ரயில்வே ஊழியராக உள்ளார்.
ரேவதி, என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார்.
ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரானேஷை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications