தெலுங்கானா மாணவிகளை மானபங்கம் செய்ததாக ஆந்திர போலீசார் மீது புகார்
ஹைதாராபாத்: தனி தெலுங்கானா கோரி போராட்டம் நடந்துவரும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மானபங்கப்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார் கூறியுள்ளனர்.
தெலுங்கானா விவகாரம் குறித்து ஆராய மத்திய அரசு ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைத்தது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்றும், அக்கமிட்டிகாகன வழிகாட்டு நெறிமுறைகளை முற்றிலும் தங்கள் கோரிக்கைக்கு விரோதமானது எனக் கூறி தெலுங்கானா ஆதரவாளர்கள் கடந்த வாரம் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் தெலுங்கானா போராட்ட மாணவர் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை கட்டுப்படுத்த சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவிகளை போலீசார் மானபங்கப்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நிஜாமாபாத் எம்.பி மதுகவுடு யாக்ஷி மற்றும் பேடபள்ளி எம்.பி விவேகானந்த் ஆகியோர் கூட்டாக இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த திங்கள் கிழமை திமுதிமுவென ஆயிரக்கணக்கான போலீசார் உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தனர்.
அங்கிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய போலீசார் பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு உள்ளேயும் புகுந்தனர். மாணவிகளின் விடுதிக்குள் நுழைந்த அவர்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, சில பெண்களை மானபங்கப்படு்த்தியுள்ளனர்.
ஆந்திர போலீசின் இந்த அத்துமீறல் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
காங். எம்.எல்.ஏ வீட்டின் மீது சாணி வீச்சு:
இந் நிலையில் ஹைதராபாத் தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்காக ராஜினாமா செய்ய முன்வராத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அவரது வீட்டின் மீது சாணியை வீசி போராட்டம் நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க்க கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது படிப்படியாக பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர்.
ராஜினாமா செய்யாதவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழு எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்யாத வாரங்கல் கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பஸ்வராஜ் சாரைய்யா வீட்டை தெலுங்கானா கட்சி தொண்டர்கள், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
சில தொண்டர்கள் எம்.எல்.ஏ. வீட்டுக்குள் புகுந்து நாற்காலி, மேஜை, டி.வி. உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்கினார்கள். வீட்டுக்குள் சாணத்தையும் வீசினார்கள். போலீசார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.
இதே போல் பதவியை ராஜினாமா செய்யாத கஜ்வேல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நர்சா ரெட்டி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ. ஷோபாராணி ஆகியோர் வீடுகளிலும் தெலுங்கானா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜினாமா செய்யாத எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications