தேர்தலில் நின்று ஜெயித்து நாடாளுமன்றம் வரவும்- கருணாவுக்கு ராஜபக்சே உத்தரவு

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பெரும் தோல்வியில் முடிய முக்கிய காரணகர்த்தா கருணா என்கிற முரளிதரன். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இவர் செய்த துரோகத்தால்தான் அந்த இயக்கம் வலுவிழந்து போனதற்கு முக்கியக் காரணம்.
புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, அதில் பிளவை ஏற்படுத்தி, கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து ராணுவம் மீட்க முக்கிய காரணமாக அமைந்தார் கருணா.
இவரை துருப்புச் சீட்டாக வைத்துக் கொண்டு புலிகளின் நிலைகளை தாக்கி அவர்களை வலுவிழக்கச் செய்து இறுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையே ஒன்றுமில்லாமல் செய்து விட்டது இலங்கை அரசு.
அரசுக்குத் துணை போன காரணத்திற்காக கருணாவை தேசியப் பட்டியலில் சேர்த்தார் ராஜபக்சே. தேசியப் பட்டியல் என்பது தேர்தலில் போட்டியிடாமலேயே எம்.பி. ஆகலாம் என்பதுதான். அதாவது கொள்ளைப் புறம் போல.
எம்.பி.ஆக்கியதோடு, அவரை அமைச்சராகவும் உயர்த்தினார் ராஜபக்சே. பின்னர் தனது இலங்கை சுதந்திரா கட்சியில் சேர்த்துக் கொண்டு கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் கொடுத்தார்.
ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டதாக தெரிகிறது. கிழக்கு மாகாணம் எனது பாக்கெட்டில் என்று கூறி வந்தவர் கருணா. ஆனால் அதிபர் தேர்தலில் வடக்கு பகுதி தமிழ் மக்கள் மட்டுமல்லாமல், கிழக்கில் வசிக்கும் தமிழர்களும், கூடவே முஸ்லீம்களும் சேர்ந்து ராஜபக்சேவுக்கு ஆப்படித்து விட்டதால் கருணா மீதான கணிவை தூக்கித் தூரப்போட்டு விட்டாராம் ராஜபக்சே.
இப்போது கருணா ராஜபக்சேவின் இதயத்திலிருந்து இறக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப அவரை தேசியப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளார். மேலும், மீண்டும் எம்.பி. ஆக விரும்பினால் தேர்தலில் போட்டியிட்டு வாருங்கள் என்றும் கூறி விட்டாராம் கருணாவிடம்.
தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி என்பது கருணாவுக்கும் தெரியும். இருந்தாலும் கெளரவத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பில் நிற்க முடிவு செய்துள்ளாராம்.
முன்பு கருணாவுடன் சேர்ந்து புலிகள் இயக்கத்திலிருந்து வெளிவந்து, கருணாவின் வலது கரம் போல திகழ்ந்தவரான பிள்ளையான் இப்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக இருக்கிறார். கிழக்கு மாகாண முதல்வராகவும் இருக்கிறார். இவரும் கருணாவும் பிரிந்து வெகு நாட்களாகி விட்டது.
கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. எனவே நிச்சயம் கருணா வெல்வதற்கு பிள்ளையான் வழி விட மாடடார் என்று கருதப்படுகிறது.
ஒருவேளை கருணா வெற்றி பெற்றால் மீண்டும் ராஜபக்சே சகோதரர்களின் அன்பைப் பெறலாம். தோற்றால் அப்படியே ஓரம் கட்டி ஒதுக்கி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் கருணாவுக்கு தற்போது நேரம் சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.
'புலி ஆதரவாளர்களை பொன்சேகா ஊக்குவித்தார்':
இதற்கிடையே, இலங்கை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யாப்பா அளித்துள்ள ஒரு பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை பொன்சேகா ஆதரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பொன்சேகாவின் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் இருந்தன. அவரது அறிக்கை இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக மக்களை திருப்பும் வகையில் இருந்தன.
விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணி, அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறியதால்தான் தமிழ் தேசிய கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது.
இதன் பிறகு பொன்சேகா விடுதலைப்புலி ஆதரவு இயக்கங்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டார். இது விடுதலைப்புலிகளை மீண்டும் தலை தூக்க உதவும் வகையில் இருந்தது. அதிபர் ராஜபக்சே கடுமையாக போராடி தீவிரவாதத்தை ஒழித்து இருக்கிறார். ஆனால் பொன்சேகா அறிக்கைகள் தீவிரவாதத்தை மீண்டும் உருவாக்குவதாக இருக்கிறது.
பொன்சேகாவுக்கு அரசியல் அனுபவம் இல்லை. இதனால்தான் என்ன பேசுவது என்றே அவருக்கு தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications