பொது நுழைவு தேர்வு-கபில்சிபலுக்கு ராமதாஸ்-வீரமணி கண்டனம்
சென்னை: பொறியியல், மருத்துவம், வணிகவியல் படிப்புகளில் சேர தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலின் அறிவிப்பு ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிரானது. எனவே இந்தத் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் நாடு முழுவதற்குமான பொதுப் பாடத் திட்டம் கொண்டு வரப்படும் என்றும்,
பொறியியல், மருத்துவம், வணிகவியல் படிப்புகளில் சேர தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் பரபரப்பான அறிவிப்புகளை மத்திய அமைச்சர் கபில்சிபல் வெளியிட்டுள்ளார்.
நமது கூட்டாட்சி அமைப்பை புறக்கணிக்கும் வகையில் கல்வியை, அதிலும் குறிப்பாக உயர் கல்வியை, முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்திய நாட்டைப் பற்றியும், நாட்டின் மக்களைப் பற்றியும் நன்கு அறியாதவர் என்பதை கபில்சிபல் நிரூபித்து வருகிறார். அவரைச் சொல்லி குற்றமில்லை. ஏனெனில் அவர் மேட்டுக்குடியில் பிறந்தவர். மேட்டுக்குடியினர் மட்டுமே பயிலும் கல்விக்கூடங்களில் கல்வி பயின்றவர். ஒரு வழக்கறிஞராக வசதி படைத்தவர்களுக்காக மட்டுமே நீதிமன்றங்களில் வாதாடியவர்.
அரசியலிலும் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வராதவர். அதனால்தான் அவரது சிந்தனையும், செயலும் எப்போதும் அவர் சார்ந்துள்ள வர்க்கத்தினரைப் பற்றியே சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன.
மேல்நிலை பள்ளிக் கூடங்களில் இருந்து வெளியேறுகிற மாணவர்களில் எத்தனை விழுக்காட்டினர் பொறியியல், மருத்துவம் மற்றும் வணிகவியல் போன்ற உயர்கல்வியை எட்டிப் பிடிக்கிறார்கள்?.
தேசிய அளவில் 2 விழுக்காடு மாணவர்கள் கூட இந்த உயர்கல்விக் கூடங்களுக்கு செல்வதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்கல்வியை எட்டிப்பிடிக்கிற 2 விழுக்காடு மாணவர்களின் நலனுக்காக இதர 98 விழுக்காடு மாணவர்களின் தலையில் பாடச்சுமையை தேவையற்ற முறையில் ஏற்றி வைக்கிற கபில்சிபலின் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு மருத்துவம், பொறியியல் கல்வியில் சேர நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இத்தனைக் காலம் எட்டாக்கனியாக இருந்த உயர்கல்வி இப்போது ஓரளவு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.
நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு என்கிற கபில்சிபலின் திட்டம் இதனை தட்டிப்பறித்து விடும். இந்த ஆபத்தை எப்பாடு பட்டேனும் தமிழகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு - மாநில அரசுகளின் கூட்டு அதிகாரப் பட்டியலில் கல்வி இடம் பெற்றிருக்கிறது. அதனை மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நேரத்தில் கபில்சிபலின் அறிவிப்புகளும், அவரின் செயல்பாடுகளும் மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் கல்வி இடம் பெற்றிருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கும் வகையில் இருக்கிறது.
மாநிலங்களை முன்கூட்டி கலந்தாய்வு செய்யாமல் தேசிய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரின் முயற்சி இதைத்தான் பிரதிபலிக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கொண்டு வரப்படும் இந்த சட்ட முன்வடிவை கடுமையாக எதிர்ப்போம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அதற்கான ஆய்வு குழுவிடமும் தமிழகத்தின் எதிர்ப்பும், தமிழக அரசின் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.
இத்துடன் நின்று விடக்கூடாது. கூட்டாட்சி அமைப்பு முறைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்து வரும் கபில்சிபலின் இத்தகைய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளம் போன்ற மாநிலங்களை ஓரணியில் திரட்டி இத்தகைய முயற்சியை முறியடிக்க முன்வர வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனுக்கு எதிரான பொதுவான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பொதுப்பாடத் திட்டம் என்ற மத்திய அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்
என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
கி.வீரமணியும் எதிர்ப்பு:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் பேசுகையில்,
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய உயர் கல்வி ஆணையம் என்ற மசோதாவை தயாரித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிலையில் உள்ளது.
இது சட்டமானால், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானிய குழு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய அமைப்புகள் ஒழிக்கப்படும். இவற்றுக்கு பதிலாக புதிதாக ஒரு தேசிய ஆணையம் உருவாக்கப்படும். இதில், ஒரு தலைவரும், 6 உறுப்பினர்களும் தலைமை அமைப்பாக இருந்து எல்லா முடிவு மற்றும் நடைமுறைகளை உருவாக்கி நடத்தும் ஒரே அமைப்பாக செயல்படும்.
மருத்துவ கல்வி, விவசாய கல்வி தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும், அமைப்புகளும் இந்த 7 பேரின் கீழ் தான் இயங்க வேண்டும். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும், தற்போது கவர்னர், மாநில அரசு பரிந்துரையை ஏற்று துணைவேந்தர்களை தேர்வு செய்யும் முறை அடியோடு ரத்து செய்யப்படும்.
தமிழக அரசு இந்த மசோதாவை எதிர்க்கும் என்று கூறியிருப்பது பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கது. முதல்வர் கருணாநிதி ஒத்த கருத்துள்ள மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியினரை அழைத்து பேசி, இந்த சட்ட மசோதாவை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும்.
2013ம் ஆண்டில் இருந்து என்ஜினீயரிங், மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல் படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நாடு முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என்றும் கபில் சிபல் கூறியிருக்கிறார்.
இந்த திட்டம் சமூகநீதிக்கு எதிராக அமையும். கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார் வீரமணி.
தமிழக மாணவர் முன்னணி கண்டனம்:
இந் நிலையில் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படும் என்று தமிழக மாணவர் முன்னணியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் அமைப்பாளர் தே.அரவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏற்கெனவே கல்வியில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள பொது நுழைவுத் தேர்வு முடிவு, எஞ்சியுள்ள உரிமைகளையும் பறிப்பதாகும்.
இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் ஒரே நுழைவுத் தேர்வு என்பது இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின் உரிமையைப் பறிப்பதாகும்.
ஏற்கெனவே இந்தியில் பொறியியலும், மருத்துவமும் படித்துவிட்டு தமிழகத்திலுள்ள இந்திய அரசுத் துறையில் ஏராளமான இந்திக்காரர்கள், தமிழக மாணவர்களின் வேலை வாய்ப்பபை பறித்துவிட்டனர்.
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உள்ள மொழி, பண்பாடு, மண் சார்ந்த அறிவியல் ஆகியவற்றை பறிக்கும் இம்முடிவை இந்திய அரசு கைவிட வேண்டும்.
உரிமையைக் காக்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் இப்போக்கை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications