அணு மின் நிலையத்திற்கு சொந்தமான ரூ.10 லட்சம் வயர்கள் திருட்டு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான மின் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
கூடங்குளத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 அணுமின் நிலைய கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
வரும் ஜூன் மாதம் முதல் இங்கு முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டி மின் சேமிப்பு நிலையத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்ல ராட்சத டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த டவர்களில் உயர் அழுத்த அலுமினிய மின் வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் களக்காடு அருகே உள்ள மீனவன்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த டவரில் இருந்து சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள 5 பேஸ் மின் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
8 டன் எடை கொண்ட இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து அபிஷேகப்பட்டி மி்ன் சேமிப்பு நிலைய பொறியாளர் நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க்கிடம் புகார் செய்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க களக்காடு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டவர்களில் ஏறி மின் வயர்களை வெட்டி எடுத்திருப்பதால் மின் தொழிலில் அனுபவம் வாய்ந்த நபர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சிலர் மின் வயர்களை லாரிகளில் ஏற்றி சென்றதை அந்தபகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் மின் வாரிய ஊழியர்கள்தான் எடுத்து செல்வதாக நினைத்து புகார் செய்யாமல் இருந்துள்ளனர். இச்சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications