மாநில சுயாட்சி எதிர்காலத்தில் நனவாக வேண்டிய கனவு - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை சுதந்திரமடைந்த இந்த நாட்டில் சுயாட்சி கோருவது தவறல்ல. மாநில சுயாட்சி கோரிக்கை என்பது நாட்டைத் துண்டாடும் அல்லது பிரிவினை செய்து தனித்ததோர் ஆட்சி அமைக்கும் முழக்கமுமல்ல; முழக்கத்தின் எதிரொலியுமல்ல. இது எதிர்காலத்தில் நனவாக வேண்டிய கனவு என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், வராவிட்டாலும் -என்றும் எதிர்க்கட்சி வரிசையிலே இருக்கும் நிலை தொடர்ந்தாலும் - இந்தியத் திருநாட்டில் ஜனநாயகத்தைக் காத்திடவும்; தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்திட உழைத்திடவும்;

அந்தப் பூங்காவைக் காத்திடும் பணியை அமைதியாகவும் - ஆர்ப்பாட்டமின்றியும் - அன்னியர்க்கு இடம் கொடாத வகையிலும் கடைப்பிடித்து நிறைவேற்றிடவும்; உறுதிபூண்டு -ஒல்லும் வகையெலாம் ஒத்துழைப்பு தருகின்ற இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்துகின்ற தகுதியும் திறமையும் நமது தி.மு.கழக அமைப்புக்கு இருக்கிறது.

இந்த நம்பிக்கை அண்மையில் நமது அமைச்சர்கள் துரைமுருகன் - ஜெகத்ரட்சகன் இருவரும் ஒருங்கிணைந்து நடத்திய சங்கத் தமிழ்ப் பேரவையின் விழாவில் கண்கூடாக கண்ட ஒன்றாகும்.

விழாவில் கலந்து கொண்டு கருத்து மழை பொழிந்த மத்திய அமைச்சர்கள் - எனது ஐம்பதாண்டு கால நண்பர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் - கண்ணியத்திற்குரிய பரூக் அப்துல்லாவும் என்னைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள்.

ஆனாலும் கூட, இந்தியாவுக்கு வழிகாட்டக் கூடிய சிறப்பியல்புகளைப் பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியபோது என் நினைவுகள் உண்மையிலேயே அண்ணா மறைந்த நேரத்தில் சென்னையில் நான் முன்னின்று நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டை நினைவு படுத்துகிறது.

அந்த மாநாட்டில் கலந்து கொண்டு எஸ்.எம்.கிருஷ்ணா ஆற்றிய உரையினையும் - தொடர்ந்து பரூக் அப்துல்லா காஷ்மீரில் நடத்திய மாநில சுயாட்சிக்கான கொள்கைகளை வலியுறுத்தும் முதல்-அமைச்சர்கள் மாநாட்டிற்கு மறைந்த நண்பர் அமைச்சர் சாதிக்பாட்சா கலந்து கொண்டதும் -மாநில சுயாட்சி குறித்து நமது கழகம் எடுத்த நடவடிக்கைகள் - கொண்டுள்ள உறுதிப்பாடு - இவைபற்றியெல்லாம் அந்த மாநாட்டில் நண்பர் சாதிக் எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து - கொல்கத்தாவில் மறைந்த தோழர் ஜோதிபாசு, மேற்கு வங்க முதல்-அமைச்சர் பொறுப்பிலே இருந்தபோது மாநில அதிகாரங்களை மேலும் பெறுவதற்கு வலியுறுத்துகிற நியாயமான தீர்மானங்களை நிறைவேற்றியதும் - என் நெஞ்சைவிட்டு அகலாத வரலாற்று ஏடுகள் மாத்திரமல்ல; எதிர்காலத்தில் நனவாக வேண்டிய கனவும் கூட!

நனவாக வேண்டிய கனவு என்று குறிப்பிடுகிறேன் - கனவு கனவாகவே போய்விடாமல், குமரிக் கடலின் ஆழத்திலிருந்து - இமயக் கொடுமுடி வரையில் பரவிக்கிடக்கும் இந்தியத் திருநாடு முழுதும் எதிரொலித்து நாம் கண்டு வரும் கனவு வெறும் கனவல்ல- எதிர்காலத்தில் என்றல்ல; நம் காலத்திலேயே நடக்கக்கூடிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டும் கடிகாரத்தின் முள்ளாக விளங்குகின்றது.

கடிகாரத்தின் முள் சுழன்றால் அதன் தொடர்ச்சியாக காலண்டரில் நாட்கள் சுழலும் - அப்படிச் சுழன்றபோது எத்தனையெத்தனை இடங்களுக்கு- நாடுகளுக்கு சுயாட்சியும், சுதந்திர ஆட்சியும் கிடைத்திருக்கிறது என்பதை நாம் நன்றாகவே அறிவோம்.
அதனால்தான் நம்பிக்கையோடு சொல்கிறேன் - "கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது'' என்ற பழம் பெரும் சுதந்திரப் பாடலை நினைவிலே நிறுத்தி -சுதந்திர மடைந்த இந்த நாட்டில் சுயாட்சி கோருவது தவறல்ல.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையானாலும் - நிதி நிலை அறிக்கை ஆனாலும் - மறவாமலும், மாறாமலும் எடுத்து வைக்கின்ற மாநில சுயாட்சி கோரிக்கை என்பது நாட்டைத் துண்டாடும் அல்லது பிரிவினை செய்து தனித்ததோர் ஆட்சி அமைக்கும் முழக்கமுமல்ல; முழக்கத்தின் எதிரொலியுமல்ல.

பெற்ற சுதந்திரத்தை இந்தியாவில் பேணிக் காக்கவும் - மாநிலங்கள் வலிமையோடு இருந்தால்தான் மத்திய ஆட்சியும் வலிமையோடு இருக்க முடியும் என்ற தத்துவத்தை உறுதிப் படவும் - உளப்பூர்வமாகவும் எடுத்துச் சொல்லி எழுப்புகிற கோஷம்தான் மாநில சுயாட்சி.

மாலை தங்கத்தால் ஆனதாயினும் - மரகத மணிகளால் ஆனதாயினும் -ஒவ்வொரு மணியையும் இணைத்திருக்கின்ற கொக்கி வலிமையாக இருந்தால் தான் மாலைக்கு வலிவு. அந்த வலிவுக்கு நாம் வைத்துள்ள பெயர்தான் மாநில சுயாட்சி.

மாநில சுயாட்சி பற்றி அறிஞர் அண்ணாவும் -சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் -முரசொலி மாறனும் தந்துள்ள விளக்கங்கள் -அந்த விளக்கங்கள் அடங்கிய புத்தகங்கள் -சுயாட்சி என்பது பிரிவினையோ என்று கருதும் பித்தம் தெளிவிக்கிற மாமருந்துகளாக அமைந்துள்ளன.

எனவே உடன்பிறப்பே, மாநில சுயாட்சி எந்தெந்த காலகட்டத்தில் - எந்தெந்த வகையில் நம்முடைய தலைவர்களாலும் -நம்முடைய இயக்கங்களாலும் - எந்தச் சூழலில் எவ்வாறு வலியுறுத்த நேரிட்டது என்பதை - அந்த வரலாற்றை ஊன்றிப் பார்த்தால் வாய்மையுடன் நாம் வலியுறுத்துகிற மாநில சுயாட்சிக்கு இந்தியப் பூபாகம் முழுதும் உள்ள மாநிலங்களின் ஆதரவு கிட்டும் என்றே நம்புகிறேன்.

அதற்கோர் புள்ளி வைத்தது போல்தான் அமைந்தது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் என் தம்பிமார்கள் நடத்திய விழா.

புள்ளியோடு நின்றால் போதுமா? புள்ளியைத் தொடர்ந்து கோலம் உருவாக வேண்டாமா? அந்தக் கோலத்தை வரைந்து முடிக்கும் வரையில் நாம் வாழ்கிறோமோ இல்லையோ? அந்தக் கோலம் வரைந்து முடிக்கப்பட்டால் அது என்றும் வாழும் கோலம் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+