முத்திரைத்தாள் மோசடி-தெல்கிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு
பெங்களூர்: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்துல் கரீம் தெலகிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தெல்கியின் கூட்டாளிகள் 21 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரைத்தாள் விற்பனை செய்து பலகோடி சம்பாதித்தாக பெங்களூர் போலீசாரால் கடந்த 2003ம் ஆண்டில் அப்துல் கரீம் தெலகி உள்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு பெங்களூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சந்திசேகர பாட்டீல் வழக்கை விசாரித்து வந்தார்.
வழக்கில் தெலகி, பக்ருதீன் உள்பட 22 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கடந்த 10ம் தேதி நீதிபதி அறிவித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான ரோஷன் பெயிக்கின் சகோதரர் ரோகன் பெயிக் உள்பட 11 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியான தெலகிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மோசடியில் ஈடுபட்ட தெலகியின் கூட்டாளிகள் 21 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெலகியின் வக்கீல் சங்கரப்பா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications