பிளஸ்டூ தேர்வு: 'மாணவர்கள் ஷூ, பெல்ட், வாட்ச் அணிய தடை இல்லை'
சென்னை: பிளஸ்டூ, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஷூ, சாக்ஸ், பெல்ட், கைக்கடிகாரம் அணிந்து வரத் தடை எதுவும் இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி கூறியுள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் ஏழரை லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.
தேர்வு மையங்கள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள், மேற்பார்வை ஆசிரியர்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமனம், தேர்வுக்கான தளவாட சாமான்கள் வினியோகம், ஹால் டிக்கெட் தயாரிப்பு உள்பட அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
நேற்று முதல் பிளஸ்-2 வினாத்தாள்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
மாணவ, மாணவிகள் தேர்வு அறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு வழிகாட்டு அறிவுரைகளை தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதைப்போல தனித்தேர்வர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சிறப்பு மையங்களில் தேர்வு எழுதுவார்கள். பொதுவாக தனித்தேர்வராக தேர்வு எழுதும் மாணவர்கள் வயதில் சற்று மூத்தவர்களாக இருப்பார்கள்.
தனித் தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் ஷூ, சாக்ஸ், பெல்ட் அணிந்துவரக்கூடாது என்று தேர்வுத்துறை ஏற்கனவே ஒரு நடைமுறையை கடைபிடித்து வருகிறது.
அதேசமயம், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தேர்வுக் கூடத்திற்கு பெல்ட், டை, ஷூ, சாக்ஸ் அணிந்து வர தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விளக்குகையில்,
பிளஸ்-2 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்கு ஷூ, சாக்ஸ், பெல்ட், டை அணிந்துவர அனுமதி இல்லை. இந்த நடைமுறை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. மற்றபடி, தேர்வு எழுதும் ரெகுலர் மாணவ-மாணவிகள் தேர்வுக்கூடத்திற்கு தாராளமாக ஷூ, சாக்ஸ், பெல்ட், டை அணிந்து வரலாம். கைக்கடிகாரமும் கட்டி வரலாம். அதற்கு தடை ஏதும் கிடையாது.
முடிந்த வரைக்கும், தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளை சோதனை செய்கிறோம் என்ற பெயரில் அவர்களை இடையூறு செய்யாதீர்கள், பதற்றப் பட வைக்காதீர்கள் என்றுதான் கண்காணிப்பாளர்களுக்கும் பறக்கும் படையினருக்கும் அறிவுரை வழங்கி உள்ளோம் என்றார்.
மின் தடைக்குத் தடை!
இதேபோல பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளில் (மையங்கள்) மின் சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மின்வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிராக்டிகல் எனப்படும் செய்முறைத் தேர்வுகள் முதல் தியரி தேர்வுகள் முடியும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். தேர்வு நடைபெறும் காலங்களில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்.
இதற்கு வசதியாக தேர்வுகள் நடைபெறும் மையங்களின் பட்டியலை மின்வாரிய அலுவலகங்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதி கல்வி அதிகாரிகள் அனுப்பி வைத்து விட்டனர். அதன்படி சம்பந்தப்பட்ட பள்ளிகள் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications